சினிமா

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

webteam

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

ஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரைபிரலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது செயலாளர் விஷால் தரப்பில், ஜுன் 23ல் நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை முந்தைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிடப்பட்டது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக அக்டோபர் 5ல் தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் கூட பதவிகாலம் முடிந்த நிர்வாகிகளுக்குதான்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. நடிகர் சங்க விவகாரத்தில், அரசு தலையிடாமல் இருந்திருந்தால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் நிதி முறைகேடு மற்றும் சங்கத்திலிருந்து நீக்கம் குறித்த உறுப்பினர்கள்  புகார்களை விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. மேலும், ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால், அப்படி நீட்டிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு மூலம் நடத்தபட்ட தேர்தலே செல்லாது என வாதிடப்பட்டது. நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு  தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் சங்கத்தேர்தல், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்குகள் அக்டோபர் 18 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.