உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ளதாக அவரின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 23-ம் தேதி சிகிச்சைக்காக தி.நகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய், காய்ச்சல் போன்ற குறைபாடுகளுக்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என பாரதிராஜாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்பு அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் மேல் சிகிச்சை எடுத்து வந்த பாரதிராஜா உடல்நலம் முன்னேறி ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது முழு உடல்நலம் பெற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் உடல்நலம் குறித்தும் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது குறித்தும் பற்றி கூற பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மருத்துவர்கள் ஆனந்த் மோகன், சபாநாயகம் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாரதிராஜா "அப்பா ஆரோக்கியமாக இருக்கிறார். இனி மீண்டும் பழைய பாரதிராஜாவைப் பார்க்கலாம். இதற்கு மருத்துவர்கள் குழு பிரஷாந்த், சபா, சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோருக்கு நன்றி. இக்கட்டான நிலையில் அப்பாவை இங்கு வந்து சேர்த்தோம், நன்றாக பார்த்து அவரை ஆரோக்கியமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் உண்மையா எனக் கண்டறிந்து பிரசுரியுங்கள். அப்பா சிகிச்சையின் போது நாங்கள் பணத்துக்கே வழி இல்லாமல் இருப்பதாக சிலர் வதந்திகள் பரப்பினர். இதுவரை சிகிச்சைக்கான மொத்த தொகையும் எங்கள் குடும்பத்தினரது வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது.
நுரையீரலில் பிரச்சனை இருந்ததால், நண்பர்களின் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்த்தோம். இதற்கான ஏற்பாடுகள் செய்த ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும், வைரமுத்து அவர்களுக்கும் நன்றி. இந்த எம்.ஜி.எம் மருத்துவமனை ஒரு கோவில் மாதிரி, அவர்களின் பணி பாராட்டத்தக்கது. அப்பா இப்போது முழுமையாக குணமடைந்துவிட்டார். இப்போதே ஷூட்டிங் போக வேண்டும் என சொல்கிறார். இன்னும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சிகிச்சைக்காக அழைத்து வந்தோம். விரைவிலேயே அந்தப் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு, மற்ற படங்கள் எல்லாவற்றிலும் நடிப்பார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரை இளையராஜா, பாக்யராஜ், ராம், செல்வமணி, தினா, ராதா, ராதிகா, வைரமுத்து என பல பிரபலங்கள் வந்து சந்தித்தது அவரை உற்சாகப்படுத்தியது. சினிமா பற்றி பேசினாலே உற்சாகம் ஆகிவிடுவார், அவர் இவ்வளவு விரைவில் குணமானதற்கு சினிமா மேல் உள்ள அவரின் காதலும் முக்கிய காரணம். சிகிச்சையின் போது அவர் இயக்கிய படங்களையே பார்த்தார். ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்க்க விரும்பினார். அப்பாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. விரைவில் பத்திரிகையாளர்களை அப்பா சந்திப்பார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவர் சுவாமிக்கண்ணு பேசுகையில், "எம்.ஜி.எம். மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைக்கு பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், பாரதிராஜா அவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் உடல்நிலை பாதித்திருந்தது. வயதாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இது ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்பதால் தொற்று முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். தற்போது உடல்நிலை முழுமையாக குணமாகிவிட்டது. எல்லோரிடமும் தெளிவாகப் பேசுகிறார். அந்த பழைய கிண்டல் கேலி எல்லாம் பேச்சில் இருக்கிறது. டான்ஸ் ஆடத் தெரியுமா? எனக் கேட்டு அவரே ஆடிக்காட்டும் அளவுக்கு உற்சாகமாக இருக்கிறார். அவர் இவ்வளவு விரைவில் குணமாக அவரின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது முக்கியமான காரணம்" என்று கூறினார்.