Kumar, Pandiraj PT Desk
கோலிவுட் செய்திகள்

”நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்துவிட்டார்”- இயக்குநர் பாண்டிராஜ் புகார்; ஒருவர் கைது

பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜிடம் ஒரு கோடியே 89 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ், அதன்பின்பு பல்வேறு படங்களை இயக்கி பிரபலம் அடைந்தார். தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பாண்டிராஜ், கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ”புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவர், வெள்ளனூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தில், 27 சென்ட் நிலத்தை தனக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக முதலில் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். பின்னர், அதே பட்டா எண் கொண்ட (481) நிலத்தின் மற்றொரு பகுதியில் இருந்து 54 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 12 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்தேன். ஆனால், அந்த இரண்டு நிலங்களையும் எனது பெயருக்கு இன்னும் அவர் பதிவு செய்யவில்லை” என்று இயக்குநர் பாண்டிராஜ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக குமார், என்னிடம் மூன்று லட்ச ரூபாய் வாங்கினார். அதன்பின் காரைக்குடியில் துணிக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்றுக்கூறி 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கினார். அதன்பின்பு கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில், 69 ஆயிரத்து 840 சதுர அடி வீட்டு மனை பட்டா அவரிடம் இருப்பதாக சொல்லி, அதை எனக்கு எழுதி தருவதாக கூறினார். அதற்காக இரண்டு தவணைகளாக ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதேபோல் ஐந்து தவணைகளாக என்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் மொத்தம் ஒரு கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு நிலம் ஏதும் தனக்கு பத்திர பதிவு செய்யாமல் மோசடி செய்து விட்டார்” என பாண்டிராஜ் தெரிவித்திருந்தார்.

”புதுக்கோட்டை நகர் பகுதியில் குமார் கூறிய வீட்டுமனைக்கு சென்று பார்த்தால், வேறு நபர்கள் வீடு கட்டி உள்ளனர். என்னை மோசடி செய்த குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து பணத்தை பெற்று தரவேண்டும்” எனவும் பாண்டிராஜ் புகாரில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து குமார் மீது 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பாரிமன்னன் தலைமையிலான புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், குமாரை கைது செய்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். திரைப்பட இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் விற்பனை செய்வதாக புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.1.89 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.