மாமன்னன்  Twitter
கோலிவுட் செய்திகள்

நடிப்பில் மிரட்டிய வடிவேலு.. ஃபகத்; முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா?- வசூல் வேட்டையாடிய மாமன்னன்!

வெற்றிமாறனின் ‘விடுதலை -1’ படம் ரூ.4.5 கோடி வசூலித்திருந்த நிலையில், அதனையும் தாண்டி ‘மாமன்னன்’ படம் வசூலித்துள்ளது.

சங்கீதா

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. சமூக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் நேற்று வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசனின் ‘தேவர்மகன்’ படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம்தான், மாமன்னன் என்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போதே இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

மாமன்னன்

இந்நிலையில், உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 6 முதல் 7 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. உலக அளவில் 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் வெளியானப் படங்களில் சிம்புவின் ‘பத்து தல’ (உலக அளவில் முதல் நாளில் ரூ.8 கோடி) படத்தைக் காட்டிலும் முதல் நாளில் அதிக வசூலை ‘மாமன்னன்’ படம் பெற்றுள்ளது. முதல் நாள் வசூலில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘வாரிசு’, ‘துணிவு’, ‘வாத்தி’ படங்களை அடுத்து ‘மாமன்னன்’ படம் சாதித்துள்ளது.

இதேபோல் வெற்றிமாறனின் ‘விடுதலை -1’ படம் ரூ.4.5 கோடி வசூலித்திருந்த நிலையில், அதனையும் மீறி ‘மாமன்னன்’ படம் வசூலித்துள்ளது. ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதால் முதல் நாளில் ‘மாமன்னன்’ படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. மேலும், அடுத்து வரும் இரு நாட்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால், கூடுதலான வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.