ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் File image
கோலிவுட் செய்திகள்

லோகேஷ் இயக்கப்போவது ரஜினிகாந்தின் கடைசிப் படமா? மிஷ்கின் சொன்னது என்ன?

ரஜினிகாந்தின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதை பேட்டி ஒன்றின் மூலம் இயக்குநர் மிஷ்கின் உறுதிப்படுத்தியுள்ளார்.

சங்கீதா

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம், வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும், சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த புகைப்படத்தை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

‘லால் சலாம்’ படத்தை அடுத்து, ரஜினியின் 170-வது படத்தை லைகா தயாரிக்க உள்ளதாகவும், ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாகவும் கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ‘லியோ’ படத்திற்கு அடுத்து நடிகர் ரஜினிகாந்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் உலா வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், இயக்குநர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ படம் முடிந்த கையோடு, ரஜினிகாந்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் படம் பண்ண உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், பின்னர் கொரோனா பரவல் மற்றும் ‘அண்ணாத்தே’ படத்தின் படப்பிடிப்பு கால தாமதத்தால், அந்தப் படம் கைக்கூடாமல் போய்விட்டதாக கூறப்பட்டன. அதன்பின்னரே கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் வெற்றிக்கரமாக இயக்கி கடந்த வருடம் பிளாக் பஸ்டர் கொடுத்தார்.

இந்த நிலையில் தான் அண்மையில் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய அவர், “இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் நன்றாக வந்து கொண்டிருக்கிறார். அடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு படம் பண்ணப் போறார். உண்மையில், அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அது ரஜினிகாந்தின் கடைசிப் படம் என்று சொல்கிறார்கள். அத்தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அவர் கூப்பிட்டு ‘எனக்கு ஒரு படம் பண்ணு’ என்று சொல்லும்போது, கிட்டத்தட்ட சினிமாவில் 50 வருடங்கள் இருந்த அவருக்கு தெரியும் யார் எப்படி என்று. நிச்சயம் இதெல்லாம் பெருமைக்குரிய விஷயம் தான்” என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்தை இயக்குவது உறுதி என்றாலும், அடுத்த வருடத்தில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், லோகேஷ் கனகராஜ் தற்போது ‘லியோ’ படத்தின் இறுதிப் படப்பிடிப்பு வேலைகளிலும், ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிகளிலும் பிஸியாக இருக்கின்றனர். ‘லால் சலாம்’ முடிந்து, இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தின் படப்பிடிப்புகளில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவே அதிக வாய்ப்புண்டு.

அதேபோல், லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட்டே தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் ஈடுபடக்கூடும். மேலும், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால் இந்த வருட இறுதியில் தான் ரஜினிகாந்த்-லோகேஷ் காம்போ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இதற்கிடையில், ரஜினிகாந்தின் 171-வது படம் தான் அவரின் கடைசிப் படம் என்று யூகங்களின் அடிப்படையில் மட்டுமே செய்திகள் உலா வருகின்றன. அதற்கு அடுத்தும் அவர் படம் நடிப்பாரா, இல்லையா என்பது, சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்து பரவும் தகவல் போன்றது தான் இதுவும். இருவருக்குமே அவரவர் ஃபீல்டில் வயது ஆகி வருவதாலேயே இந்த மாதிரியான தகவல்கள் பரவி வருகின்றன.