சந்தீப் கிஷன், மெஹ்ரின், சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’நெஞ்சில் துணிவிருந்தால்’. அன்னை பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில் சுசீந்திரன் பேசும்போது, ’நான் மகான் அல்ல’ திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ, அதை போல இந்தப்படமும் வெற்றி படமாக அமையும். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ’ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ’ஜீவா’ படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின்தான் அது கடினம் என்பது தெரிந்தது.
சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற சிறந்த நடிகனை இந்த படத்தில் பார்த்தேன். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்றார் இயக்குநர் சுசீந்திரன்.