நடிகை ஸ்ரீதேவி ட்விட்டர்
சினிமா

நடிகை ஸ்ரீதேவி மரணம்: பிரபல யூடியூபர் மீது குற்றப்பத்திரிகை!

நடிகை ஸ்ரீதேவி மரண விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Prakash J

இந்திய சினிமா நட்சத்திரமான ஸ்ரீதேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு துபாய் ஹோட்டல் குளியல் அறையில் இறந்துகிடந்தார். இவரது மரணம், அப்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான தீப்தி பின்னிட்டி என்ற பெண், ’ஸ்ரீதேவியின் மரணத்தை இரு அரசுகளும் (துபாய் மற்றும் இந்தியா) மூடி மறைப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார். அதோடு, ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமிருந்து வந்த கடிதங்களாக சிலவற்றை காட்டியிருந்தார்.

ஆனால், அக்கடிதங்கள் போலி என்று மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தினி ஷா என்பவர் தீப்தி பின்னிட்டி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் ஆகியோர் மீது சிபிஐயில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, இதுகுறித்து கடந்த ஆண்டு, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், தீப்தியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் தீப்தியிடமிருந்து லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இப்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ’பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுப்பியதாக, யூடியூப் விவாதத்தின்போது தீப்தி பகிர்ந்த கடிதங்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீப்தி, ’என்னிடம் வாக்குமூலம் வாங்காமல் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள் என்று தெரியவில்லை. என்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்போது ஆதாரங்களை தாக்கல் செய்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த அஸ்வின்; ஏமாற்றிய DRS முடிவால் தள்ளிப்போன மற்றொரு சாதனை!!