சினிமா

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றியா விக்ரம்? - 6 அசத்தல் தகவல்கள்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றியா விக்ரம்? - 6 அசத்தல் தகவல்கள்

சங்கீதா

காலத்தால் தவிர்க்க முடியாத கலைஞனாக எப்போதும் முன்னணியில் இருப்பவர் கமல்ஹாசன். அவரோட படங்களில் எப்போதும் புதுமையும், தொழில்நுட்ப உத்தியும் இருப்பதால் கமல்ஹாசன் படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும் வசூலில் கிங்காக இருந்ததில்லை. தமிழ் திரையுலகை அடுத்த தளத்திற்கு எடுத்துக்கிட்டு போறவரின் படங்கள், வசூல் ரீதியாக பெரியளவில் சாதனை பண்ணது இல்லையேனு சிறு வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தாலும் ‘விக்ரம்’ படம் அந்த எண்ணைத்தை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது என்றே கூறலாம். சரி வாங்க நமக்கு தெரிஞ்ச 6 அசத்தல் தகவல்களை பார்க்கலாம்.

1. வார இதழ் ஒன்றில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விஞ்ஞான தொடர்கதையை அவருடன் இணைந்து, கமலால் உருவாக்கப்பட்ட படம்தான், 1986-ல ராஜசேகர் இயக்கத்தில வெளியான ‘விக்ரம்’ படம். அப்பவே ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாகவும், தமிழ் சினிமாவில் முதன்முதலாக கம்ப்யூட்டரை காட்டியப் படமாகவும் கூறப்படும்நிலையில், அந்தப் படத்தில புலனாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரியா அருண் குமார் விக்ரம் என்ற பெயரில கமல் வருவார். அந்தப் பெயரும், அறிமுகத்தையும் மட்டும் அப்படியே 2022 ‘விக்ரம்’ படத்துல லோகேஷ் பயன்படுத்தியிருப்பாரு.

2. ‘விக்ரம்’ படத்தில கதாநாயகர்களை விட அதிகளவில் துப்பாக்கிதான் கதாநாயகனாக இருந்துச்சுன்னு சொல்லும் அளவுக்கு காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், பழைய ‘விக்ரம்’ படத்தில கமல் பயன்படுத்தின, அதாவது 36 ஆண்டுகளுக்கு முன்னதாக பயன்படுத்தின அதேவகையான துப்பாக்கியத்தான் இந்தப் படத்தோட போஸ்டரில பயன்படுத்தியிருப்பாரு. அதுமட்டுமில்லாம மருதநாயகத்துக்கு வச்சிருந்த ஆயுதங்களகூட இந்தப் படத்துல பயன்படுத்திக்க கமல் அனுமதிச்சிருந்தாரு.

3. விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் படங்கள் எல்லாம் பிரச்னைகளை சந்தித்துதான் வெற்றிப் பெற்றுச்சு. ஆனால் கமலே மகிழ்ச்சியோடு சொல்லும் அளவுக்கு பிரச்னைகளை சந்திக்காமல் கோலிவுட்டை வாயை பிளக்க வைத்த வெற்றி என்றால் அது லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம்தான்.

4. இரண்டு ‘விக்ரம்’ படங்களையுமே கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து இருக்காங்க. அந்த காலத்தில அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடும் படங்களே வெற்றிப் படமாக கருதப்பட்டநிலையில், அந்தப் படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. பெரிய அளவில் வசூல் வெற்றியை அடையவில்லை என்றாலும், புதுமையாக இருந்தது. ஆனால் அந்த செண்டிமென்ட்டை உடைத்து இப்போ வெளியாகி இருக்கிற ‘விக்ரம்’ இந்த காலத்து வசூல் கணக்குப்படி, 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டி தாறுமாறு வெற்றியை கொடுத்துருக்கு. இன்னும் படம் சக்சஸ் புல்லா ஓடிட்டு இருப்பதால், இதுக்கு மேலயும் வசூல எதிர்பார்க்கலாம்.

5. தமிழ்நாட்டில இதுவரை வெளியானப் படங்களிலேயே ‘பாகுபலி 2’ படம் தான் 150 கோடி ரூபாய் வசூலித்து அதிக வசூல் செய்த படமாக இருக்கு. ஆனா இந்த சாதனையை ‘விக்ரம்’ படம் முறியடிக்கப் போகுது. இன்னும் சில லட்சங்களே பாக்கியுள்ள நிலையில், படம் வெளியான 16 நாளான இன்று அந்த சாதனை முறியடிக்கப்படும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ரூ. 149 கோடி, ஆந்திரா, தெலுங்கானா ரூ. 29.5 கோடி, கர்நாடகா ரூ. 21 கோடி, கேரளா ரூ. 34 கோடி, இந்தி மற்றும் மற்ற மாநிலங்கள் ரூ. 10 கோடி, வெளிநாடுகளில் ரூ. 113.35 கோடி, இந்தியாவில் ரூ. 243.5 கோடி, மொத்தம் 356.85 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கேரளாவில் எந்த தமிழ் படங்களும் சாதிக்காததை சாதித்துள்ளது ‘விக்ரம்’.

6. இந்தப் படத்தில முக்கியமான 3 கதாபாத்திரங்களை சுத்திதான் கதை நகரும். அந்த 3 பேரு யாருனா ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் தான். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஃபகத் ஃபாசில் ‘Thondimuthalum Driksakshiyum’ படத்திற்காகவும், விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காகவும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்காங்க. கமல்ஹாசன் ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

1986 ‘விக்ரம்’-ல தனது மனைவியை இழந்துருவாரு கமல், அதுக்கப்புறம் தான் கதைக்களமே மாறும். அதேபோல 2022 ‘விக்ரம்’-ல மகன இழந்தவரா வருவாரு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ‘விக்ரம்’ படத்தைப் பற்றி...