சினிமா

கொரோனா பேரிடர் காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி - கடுமையாக சாடும் ஸ்ருதிஹாசன்

கொரோனா பேரிடர் காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி - கடுமையாக சாடும் ஸ்ருதிஹாசன்

webteam

இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கும், கடுமையான கட்டுப்பாடுகளூம் விதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் துயரமான இந்த நேரத்திலும் பிரபலங்கள் சிலர் மாலத்தீவு, கோவா என சுற்றுலா தலங்களைச் தேடி சென்று விதவிதமான செல்ஃபிகளை பதிவிட்டு வருவதை நடிகை ஸ்ருதிஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் 'தி குயின்ட்' தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, "நான் ஒருபோதும் இதுபோன்ற செயலைச் செய்யமாட்டேன், ஏனெனில், மக்கள் பலரும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

சிலருக்கு (பிரபலங்கள்) ஒரு சிறந்த விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் களிக்கின்றனர். அவர்கள் தங்களது விடுமுறையைக் கொண்டாட தகுதியானவர்கள்தான். ஆனால், மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வதற்கான நேரம் இது என்று நான் தனிப்பட்ட முறையில் உணரவில்லை.

இது அனைவருக்கும் மிகவும் கடினமான நேரமாகும். உங்கள் செல்வத்தால் கிடைக்கும் சுகத்தை மக்களின் முகங்களில் வீசவேண்டாம். இதுபோன்ற ஒரு துன்பகரமான நேரத்தில் ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தையும் வசதியையும் பந்தாவாக வெளியே காட்டுவது (செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது) பொறுப்பான நடத்தை அல்ல. மாறாக, மக்களால் நாம் பெற்ற இந்த வசதிகளுக்கு நன்றி செலுத்துவதற்கான நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.

கொரோனா முதல் அலை தணிந்தபின், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் கூட நான் ஒருபோதும் எனது பாதுகாப்பைக் குறைக்கவில்லை. நாம் இன்னும் ஒரு தொற்றுநோய் பிடியில் இருக்கிறோம் என்பதை நான் ஒருபோதும் மறக்கவில்லை. இதை நான் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிந்தேன். நான் இதை அப்போதே சொன்னபோது 'நான் பைத்தியம்' என்று மக்கள் நினைத்தார்கள்" என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதற்கிடையே, ஸ்ருதிஹாசன் அடுத்தாக பிரபாஸின் 'சலார்' படத்தில் இணைந்துள்ளார். இதில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழில் விஜய்சேதுபதி உடன் இவர் நடித்த 'லாபம்' படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.