madhumitha pt
சினிமா

“விபத்து நடந்தது உண்மைதான்.. ஆனா குடிச்சுட்டு வண்டி ஓட்டினேனா?” - ‘எதிர்நீச்சல்’ மதுமிதா விளக்கம்!

சென்னையில் கடந்த 21ம் தேதி எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமதா கார் விபத்து ஏற்படுத்தியதாக பல்வேறு செய்திகள் பரவியது. இந்நிலையில் அதற்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் மதுமிதா.

யுவபுருஷ்

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை மதுமிதா (24). இவர் கடந்த 21ம் தேதி இரவு 8 மணியளவில் தனது நண்பரின் புதிய காரை சோழிங்கநல்லூரில் உள்ள பிரியத்தியங்கரா கோயிலில் பூஜை போடுவதற்காக அவருடன் சென்றுள்ளார். தொடர்ந்து, மீண்டும் வீடு திரும்பியபோது, காரை மதுமிதாவே ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது கோவில் தெருவில் இருந்து சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலைக்கு வெளியில் வந்து இடது பக்கம் திரும்பியுள்ளார். அங்கு மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.

நடிகை மதுமிதா - கார் விபத்து

இதனால் வாகனத்தை திருப்பி எதிர்திசையில் இயக்கி வந்துள்ளார். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிகுமார் (29) மீது மோதி உள்ளார். இதில் அவருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடிபட்ட காவலர் சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து ஆர்டிஓ சோதனைக்கு பின் காரை ஒப்படைத்துள்ளனர். அன்றையே தினமே 4 மணி நேர விசாரணைக்கு பின் காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காரை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காவலரிடம் நாம் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. வழக்கு விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திருமுருகனிடம் கேட்டபோது, “விபத்தில் சிக்கிய கார் மதுமிதாவின் நண்பருடையது. புதிய கார் வாங்கி பூஜை போட வந்து விட்டு திரும்பி செல்லும் போது எதிர் திசையில் சென்று காவலர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். நடிகையிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது. அவர் குடிபோதையில் எல்லாம் இல்லை” என்று விளக்கமளித்தார்.

இதற்கிடையே, விபத்து குறித்து இன்ஸ்டாகிராம் மூலமாக விளக்கமளித்துள்ள நடிகை மதுமிதா, ”என் தொடர்புடைய ஒரு வதந்தி குறித்து விளக்கமளிக்கவே இந்த இந்த வீடியோ. நான் குடித்துவிட்டு காரை ஓட்டி ஒரு போலீஸ் அதிகாரியை இடித்துவிட்டதாகவும், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களாக நியூஸ் சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல.

அதாவது நான் குடித்துவிட்டு வண்டியை ஓட்டவில்லை. விபத்து நடந்தது உண்மைதான், அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாகத்தான் இருக்கிறார். நானும் நலமாகத்தான் இருக்கிறேன். இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்பாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுமிதாவுக்கு விபத்து நடந்த விவகாரத்தில், போலீஸாரிடம் விளக்கம் கேட்டு, அவர் குடித்துவிட்டு வண்டியை ஓட்டவில்லை என்று புதியதலைமுறை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.