தனது உடல்நிலை முழுமையாக குணமாகும்வரை, சினிமாவில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடைசியாக, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கிய ‘யசோதா’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 5 மொழிகளில் உருவாகியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமந்தா, வரலஷ்மி சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ வரலாற்று திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
மேலும் விஜய் தேவரகொண்டாவுடன், சமந்தா இணைந்து நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம், கிட்டத்தட்ட 60 சதவிகிதப் படப்பிடிப்பு நிறைவடைந்து, அதுவும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவரது நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ‘தி பேமிலி மேன் சீசன் 2’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, பாலிவுட்டில் இரண்டுப் படங்களில் நடிக்க சமந்தா கமிட் ஆகியிருந்தார். ஆனால் அவற்றை தொடர முடியாமல் போயுள்ளது சமந்தாவுக்கு. ஏனெனில் நடிகை சமந்தா சினிமாவிலிருந்து விலகி நீண்ட காலம் இடைவெளி எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
மையோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ‘யசோதா’ ட்ரெயிலர் ரிலீஸின்போதுதான் பலருக்கும் தெரியவந்தது. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தற்போது இந்த நோயினால் உடல்நிலை மோசமடைந்து வருவதால், உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, குணமடைந்தப்பின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்று சமந்தா முடிவு எடுத்துள்ளாராம்.
தான் சிகிச்சை முடிந்துவர அதிக நாட்கள் எடுக்கும் என்பதால், அதுவரை தயாரிப்பாளர்கள் காத்திருப்பது அவர்களுக்கு நஷ்டத்தையே தரும் என்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்துக் கூறி, ஒப்பந்தமான 2 பாலிவுட் படங்களில் இருந்து நடிகை சமந்தா விலகியுள்ளார். எனினும், விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புகளை முழுமையாக முடித்தப் பின்னரே, சிகிச்சைக்கு செல்ல சமந்தா திட்டமிட்டுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் விரைவில் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.