சினிமா

'க்ளாடியேட்டர்' ரசிகர்களுக்கு ஆச்சரிய அப்டேட் கொடுத்த இயக்குநர் ரிட்லி ஸ்காட்!

'க்ளாடியேட்டர்' ரசிகர்களுக்கு ஆச்சரிய அப்டேட் கொடுத்த இயக்குநர் ரிட்லி ஸ்காட்!

PT WEB

புகழ்பெற்ற 'க்ளாடியேட்டர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராக இருப்பதாக அதன் இயக்குநர் ரிட்லி ஸ்காட் ஆச்சரிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2000-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் `க்ளாடியேட்டர்'. தனக்குத் துரோகம் செய்து, தன் குடும்பத்தைக் கொலை செய்த அரசனைக் கொல்லும் ஒரு போர்வீரன் என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். வெளியாகி 21 ஆண்டுகளை கடந்தபோதும் இந்தப் படத்துக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடங்கி 'பாகுபலி' வரை இன்று நாம் பார்க்கும் வரலாற்று - சரித்திரப் புனைவுத் திரைப்படங்கள் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள போர்க்கள காட்சிகள் பலவற்றிலும் 'க்ளாடியேட்டர்' படத்தின் தாக்கம் இருக்கும்.

அப்போதே இந்தப் படம் சர்வதேச அளவில் 460 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது. வசூல் மட்டுமல்ல, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஐந்து ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. 'க்ளாடியேட்டர்' படத்தை பிரபல இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்க, ஹீரோவாக ஹாலிவுட் நடிகர் ரஸ்ஸல் க்ரோவும், `ஜோக்கர்' படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற வகீன் ஃபீனிக்ஸ் வில்லனாகவும் நடித்தனர்.

இவர்கள் மூவர் திரை வாழ்க்கையிலும் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை அறியப்படும் `க்ளாடியேட்டர்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அதன் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, `க்ளாடியேட்டர்' அடுத்த பாகம் எடுக்கப்படும் என்று 2018-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. என்றாலும் எப்போது என்று தெரிவிக்கப்படவில்லை. தற்போது அதன் இயக்குநர் ரிட்லி ஸ்காட் அதற்கான விடையை சொல்லியுள்ளார்.

83 வயதாகும் அவர், 'தி எம்பயர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``ஏற்கெனவே 'க்ளாடியேட்டர்' அடுத்த பாகத்தை எழுதிவிட்டேன். 'நெப்போலியன்' படத்தை முடித்தவுடன், 'க்ளாடியேட்டர்' தொடங்கப்படும்" என்றுள்ளார். இயக்குநர் ரிட்லி ஸ்காட் தற்போது பிரான்சின் முன்னாள் பேரரசரும் ராணுவத் தலைவருமான மாவீரன் நெப்போலியன் வரலாற்றை மையப்படுத்தி 'கிட் பேக்' என்ற படத்தை எடுத்து வருகிறார். இதிலும் `ஜோக்கர்' படத்தில் நடித்த, ஆஸ்கர் விருது பெற்ற வகீன் ஃபீனிக்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் 2023-ம் ஆண்டே வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், 'க்ளாடியேட்டர்' படம் உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை. இன்னும் சில ஆண்டுகள் அதன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டி வரும்.