சினிமா

ராஜூ முருகனின் ’ஜிப்ஸி’க்கு ’ஏ’ சான்றிதழ்: தீர்ப்பாயம் அனுமதி

ராஜூ முருகனின் ’ஜிப்ஸி’க்கு ’ஏ’ சான்றிதழ்: தீர்ப்பாயம் அனுமதி

webteam

ராஜூ முருகன் இயக்கியுள்ள ’ஜிப்ஸி’ படத்தை ஏ சான்றிதழுடன் திரையிட, தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. 

குக்கூ, ஜோக்கர் படங்களுக்கு பின் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம், ’ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது. இதன் ஒரு பாடல் காட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலர் நடித்துள்ளனர். ஷூட்டிங் முடிந்து, இந்தப் படம் தணிக்கைக்குச் சென்றது. 

படத்தை பார்த்த தணிக்கை குழு, சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது. இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்ப்பாயத்துக்கு படம் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில், “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்னை? இருமுறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா?” என்று பதிவிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை கவுதமி தலைமையிலான தீர்ப்பாயக் குழு சென்னையில் ஜிப்ஸி படத்தைப் பார்த்தது. அதில் சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தனர். அதை நீக்க படக்குழு சம்மதித்ததை அடுத்து ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.