சினிமா

’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்!

’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்!

webteam

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ’லக்‌ஷ்மி பாம் (Laxmmi Bomb)’  என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் ஹீரோ. ராகவா லாரன்ஸ் இயக்குனராக அறிவிக்கப்பட்டிருந்தார். கியாரா அத்வானி ஹீரோயின்.  அக்‌ஷய்குமார் நடித்த சில ஹாரர் காமெடி படங்கள் இந்தியில் ஹிட்டாகி இருந்ததால் இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரிக்கின் றனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. லாரன்ஸ் இயக்கினார். 

இந்நிலையில்,இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இது, இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு தெரியாது. அவருக்குத் தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதால் கோபமடைந்தார். இதையடுத்து படத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்தார் ராகவா லாரன்ஸ்.

 அதில். ’’படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் தந்துள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார் அவர்.

ராகவா லாரன்ஸின் முடிவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பையில் கூடி ராகவா லாரன்ஸின் முடிவு பற்றி ஆலோசித்தனர். பின், வேறு இயக்குனரை வைத்து படத்தை முடிக்க முடிவு செய்தனர்.

‘’படத்தின் இரண்டாவது ஷெட்யூல் செப்டம்பர் மாதம் மும்பையில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அக்‌ஷ ய்குமார். அதற்குள் பிரச்னை முடிந்துவிடும்’’ என்று படக்குழு கூறியிருந்தது. இந்நிலையில் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய இருப்பதா க ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’லக்‌ஷ்மி பாம் படத்தில் நான் வெளியேறுவதை அறிந்ததும் எனது ரசிகர்களும் நடிகர் அக்‌ஷய் குமார் ரசிகர்களும் இந்தப் படத்தை இயக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அவர்கள் அன்பில் திக்குமுக்காடி போனேன். கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை போல நானும் வருத்தத்தில் இருந்தேன். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை சந்திக்க வருகின்றனர். எனது சுயமரியாதைக்கு பாதிப்பில்லாமல் வேலை செய்ய வாய்ப்பிருந்தால் எனது முடிவை மறுபரிசீலனை செய்வது பற்றி யோசிப்பேன்’’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பிரச்னை முடிந்துவிட்டதாகவும் அவரே படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.