’காஞ்சனா’ இந்தி ரீமேக் படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகுவதாக ராகவா லாரன்ஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ், இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடங்கி நடந்து வந்தது.
படத்துக்கு ’லக்ஷ்மி பாம் (Laxmmi Bomb)’ என்று டைட்டில் வைத்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின் மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின் மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ அக்ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இது, இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து படத்தில் இருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழில், ’மதியாதார் வாசலை மிதியாதே’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த உலகில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். அதனால் ’லக்ஷ்மி பாம்’ படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் குறிப்பிட முடியாது. எனக்கு தெரியாமலேயே, என்னை ஆலோசிக்காமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் தந்துள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது.
இந்தப் படத்துக்காக நான் எந்த ஒப்பந்தத்தையும் போடவில்லை. அதனால் படத்தில் இருந்து அப்படியே வெளியேற முடியும். ஆனால், நான் அப்படி செய்யமாட்டேன். நடிகர் அக்ஷய்குமார் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருப்பதால் எனது ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். அவர்கள் வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுத்துக் கொள்ளலாம். ’லக்ஷ்மி பாம்’ படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த முடிவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.