சினிமா

பிரபாஸின் 'ராதே ஷியாம்' டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஜீ 5, நெட்ஃபிளிக்ஸ்

பிரபாஸின் 'ராதே ஷியாம்' டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஜீ 5, நெட்ஃபிளிக்ஸ்

நிவேதா ஜெகராஜா

'பாகுபலி' புகழ் பிரபாஸின் 'ராதே ஷியாம்' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை வாங்கியுள்ள தளங்கள் குறித்த அறிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் 'ஜீ 5' ஓடிடி தளமும், இந்தி, ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மொழி, கொரிய மொழி, துருக்கிய மொழி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. சேட்டிலைட் உரிமையை தமிழில் விஜய் டிவி வாங்கி இருந்தது.

`ஆர்ஆர்ஆர்' படத்துக்கு இணையாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மற்றொரு தெலுங்கு படம் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ராதே ஷியாம்'. பூஜா ஹெக்டே பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, இயக்குநர் ராதா கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். 70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்தி ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கும் நிலையில், இதர மொழி ஓடிடி உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த மொழிகளின் தொலைக்காட்சி உரிமையையும் 'ஜீ' நிறுவனம் மொத்தமாக கைப்பற்றி இருக்கிறது. முன்னணி நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில் ஜீ நிறுவனம் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வளவு தொகைக்கு என்பது குறித்த தகவல் வெளியிடப்பவில்லை என்றாலும், மிகப்பெரிய அளவிலான தொகைக்கு கைமாறியுள்ளது எனக் கூறுகிறது தெலுங்கு திரையுலகம். இந்திய அளவில் டிஜிட்டல் தளங்களில் அதிகளவு விலைக்கு போன சாதனையாக 'ஆர்.ஆர்.ஆர்' படம் இருந்த நிலையில் இதற்கடுத்த படியாக தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தின் டிஜிட்டல் உரிமம் விலை போயுள்ளது என்றும், 'பாகுபலி' படம் கொடுத்த வெற்றியால், இந்திய அளவில் மாபெரும் வியாபாரம் கொண்ட நடிகராக பிரபாஸ் வளர்ந்திருப்பதை கருத்தில் கொண்டு இந்த பெரிய தொகைக்கு படம் வாங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.