சினிமா

மருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' படக்குழு!

மருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' படக்குழு!

webteam

கொரோனா பேரிடருக்கு எதிராக நாடு போராடி வரும் சூழலில், நடிகர் பிரபாஸின் 'ராதே ஷியாம்' படக்குழு ஒரு மருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இதன் விளைவாக படுக்கைகள், ஆக்சிஜன், மற்றும் மருந்துகள் போன்ற மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. மருத்துவ அவசரகால தேவையை கருத்தில் கொண்டு பிரபலங்கள் பலரும் நிவாரணப் பணிகளில் பங்களித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் பிரபாஸின் 'ராதே ஷியாம்' படக்குழு ஒரு மருத்துவமனையையே நன்கொடையாக அளித்த சம்பவம் வெளிவந்துள்ளது.

பிரபாஸ்- பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ராதே ஷியாம்'. ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், படத்திற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை செட்டை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 70-களின் மருத்துவமனையாக வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை செட்டானது, 50 தனி படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளை கொண்டிருந்துள்ளன.

இந்த நிலையில்தான் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளரான ரவீந்தர் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு ஒரு மருத்துவமனை படுக்கை வேண்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது படுக்கைகளின் பற்றாக்குறை இருப்பதை அறிந்த ரவீந்தர், அதன்பின் படத்தில் வடிவமைக்கப்பட்ட மருத்துவமனை செட்களில் உள்ள பொருட்களை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுக்க வேண்டும் என 'ராதே ஷியாம்' படத்தின் தயாரிப்பாளர்களை அழைத்து விவரத்தை சொல்லி இருக்கிறார். அதன்படி அவர்களும் ரவீந்தரின் யோசனைக்கு ஓகே சொல்ல இப்போது 50 தனி படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள வடிவமைப்பாளர் ரவீந்தர் ரெட்டி, ''படுக்கைகள் கிடைக்கவில்லை என்றும், அவை கொள்முதல் செய்வதில் சிரமம் இருப்பதாகவும் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி கூறியபோது, கடுமையான பற்றாக்குறையையும் பிரச்னையின் தன்மையையும் உணர்ந்தேன். இதையடுத்து படத்திற்காக எழுப்பிய மருத்துவமனை செட்டை நிஜ மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்க முடியுமா என்று எனது திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கேட்டேன். அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டனர்.

படத்திற்காக நாங்கள் வடிவமைத்த இந்த படுக்கைகள் பெரியவை, வலிமையானவை மற்றும் நோயாளிக்கு உகந்தவை" என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் ஒன்பது ட்ரெக் லாரிகளில் ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.