‘வலிமை’ திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 2-வது முறையாக அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தநிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தநிலையில், தமிழில் 14 நிமிடங்களும், இந்தியில் 18 நிமிடங்களும் குறைக்கப்பட்டு, கடந்த 26-ம் தேதி முதல் ‘வலிமை’ புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் வழக்கறிஞர் சங்கம் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்தக் காட்சிகள் நீக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.