சினிமா

கிருஷ்ணகிரி: கொரோனா அச்சத்தை மறந்து படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை காணக் கூடும் மக்கள்

கிருஷ்ணகிரி: கொரோனா அச்சத்தை மறந்து படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை காணக் கூடும் மக்கள்

kaleelrahman

கிருஷ்ணகிரியில் நடிகர் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் - கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை அதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர். 

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் திரைப்படம், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிருஷ்ணகிரியில் தங்கி விஜய் சேதுபதி பட காட்சியில் நடித்து வருகிறார். திரைப்படம் எடுக்கப் படுவதால் ஏராளமான பொதுமக்கள் அதை காண்பதற்கும் நடிகர்களை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர்.

நாள்தோறும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிகரை காண்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காலை 6 மணி முதலே அவர் தங்கி உள்ள ஓட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். திரைப்படம் எடுக்க கூடிய இடங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக திரைப்படம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி 100 பேர் மட்டுமே பங்கேற்கக் கூடிய அளவில் பணியாளர்களை அமர்த்திக்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சூட்டிங்கில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

சூட்டிங்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் முகக்கவசம் அணிவதில்லை என்றும் சூட்டிங்கை பார்ப்பதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருவதாகும் அவர்களும் தனிமனித இடைவெளி முகக்கவசம் அணியாமல் மிக குறுகிய இடைவெளியில் நெருக்கமாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு முண்டியடித்து நடிகர்களை காண்பதற்கு முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் படப்பிடிப்பை பார்க்க வருபவர்களுக்கு தொற்று இருந்தால் அதன் மூலமாக மற்றவர்களுக்கு பரவி அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சூட்டிங் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் குறைந்த அளவே இருப்பதால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கண்டு முதல் இரண்டு நாட்கள் மட்டும் சூட்டிங்கில் பங்கேற்று விட்டு பின்னர் நடிக்க விருப்பமில்லை என சொல்லி சென்று விட்டதாகவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர் கொரோனா அச்சம் காரணமாகவே சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக திரைப்பட இயக்குனர் ஜனநாதன் கேட்டபோது கிருஷ்ணகிரி பகுதியில் திரைப்பட சூட்டிங் எடுக்கப்படாத நிலையில் தற்போது முன்னணி நடிகர்களை கொண்டு சூட்டிங் எடுக்கப்படுவதால் அதனை காண்பதற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதாகவும் முடிந்த அளவு நாங்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறோம். காவல்துறையிரும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் நாங்கள் அனைவரும் நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சூட்டிங்கில் பங்கேற்று வருவதாகவும் தெரிவித்தார்.