மக்கள் நூலகம் எனும் பெயரில் பாடலாசிரியர் சினேகன் இலவச நூலகம் ஒன்றைத் தொடங்குகிறார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கவிஞர் சினேகன். தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களை எழுதி இருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் சினேகன் குறித்து பலவகையான விமர்சனங்கள் எழுந்தாலும் அவருக்கென தனியாக ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் அந்த பணத்தின் மூலம் மக்களுக்காக நூலகம் ஒன்றைக் கட்டுவேன் என்று சினேகன் அடிக்கடி குறிப்பிட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறவில்லை என்றாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அவர் கூறியதுபோல் நூலகம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. தொன்மம் தொடங்கி டிஜிட்டல் வரை அனைத்து வகையிலான புத்தகங்களும் இடம்பெறும் வகையில் இந்த நூலகத்தை வடிவமைக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. சினேகன் உடன் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு உருவாகும் மக்கள் நூலகத்திற்கான பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.