"பாசக்கார ரசிகர்களின் பாராட்டே தனக்கு ஆஸ்கர்" என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார். தனி ஒரு ஆளாக இயக்கி நடித்த அவரது 'ஒத்த செருப்பு' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்தவாரம் திரைக்கு வந்தப் படம் 'ஒத்த செருப்பு'. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத இந்த முயற்சிக்கு சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரங்கள் கிடைக்கும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் எதிர்பார்ப்போடு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனால், இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் ஒத்த செருப்பு திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் 'gully boy' திரைப்படம் இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், "பாசக்கார ரசிகர்கள் தந்திருக்கும் பாராட்டே ஆஸ்கர் எனக்கு" எனும் வாசகத்துடனான போஸ்டரை பார்த்திபன் பதிவிட்டிருக்கிறார். தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல் என கூறியுள்ளார். ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ஆம் அறிவை, இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு என்று வேதனை தெரிவித்துள்ள பார்த்திபன், தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1957-ல் இருந்து ஆஸ்கர் விருதுக்கு இந்திய படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில், வெறும் 20 படங்கள் மட்டுமே இந்தி தவிர்த்த மற்ற மொழிகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.