சினிமா

ஜாலியான கிராமவாசிகள்...! சிக்கிக் கொண்ட பட்டதாரி...! “பஞ்சாயத்” - இணைய தொடர்...!

ஜாலியான கிராமவாசிகள்...! சிக்கிக் கொண்ட பட்டதாரி...! “பஞ்சாயத்” - இணைய தொடர்...!

subramani

இந்தியாவின் அழகே இந்நிலத்தில் நிறைந்து கிடக்கும் கிராமங்களும் அதன் மனிதர்களும் தான். உத்தரப்பிரதேசத்தின் தொலைதூர கிராமமொன்றின் அழகான நாட்களை இதமான காட்சி மொழியில் நமக்குத் தருகிறது ‘பஞ்சாயத்’ எனும் இந்த இணையத் தொடர்.

எட்டு எபிசோடுகளாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பஞ்சாயத் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் தனித்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜாலியான கிராமத்து மனிதர்கள் அங்குள்ள பஞ்சாயத்து தலைவர், அவரது குடும்பம், நண்பர்கள் என ஒரு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அசல் இந்தியாவின் மண்வாசனையினை ஜாலியான கலகலப்பான இணைய தொடராக உருவாக்கி வழங்கியிருக்கிறார் இயக்குநர் தீபக் குமார் மிஸ்ரா. இக்கதையினை எழுதியிருக்கிறார் சந்தன் குமார்.

நகரத்தில் பொறியியல் படித்துவிட்டு பெரிய வேலைக்காக காத்திருக்கும் அபிஷேக் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் புலேரா கிரமத்திற்கு அரசு சார்பில் நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார். அவ்வூர் பெரியவர் ப்ரதான் ஜி மற்றும் அவரது மனைவி மஞ்சு தேவி, அபிஷேக்கின் உதவியாளர் விகாஸ் மற்றும் பிரகலாத் ஆகியோரின் ஜாலி கேலி நாட்கள் தான் இந்த பஞ்சாயத் இணைய தொடர். துவக்கத்தில் எப்படியாவது படித்து பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு இந்த கிராமத்தை விட்டு ஓடிவிட நினைக்கும் அபிஷேக் கால ஓட்டத்தில் அக்கிராமத்தை நேசிக்கத் துவங்கிவிடுகிறார்.

தேர்தலில் சில தொகுதிகள் பெண்களுக்கென்று ஒதுக்கப்படும். இப்படியான தொகுதிகளில் அப்பகுதியில் ஆதிக்கம் உள்ள ஆண் தன் மனைவியை தனக்குப் பதிலாக தேர்தலில் நிறுத்தி வெல்வார். அலுவலக ரீதியில் மட்டுமே மனைவியின் பெயர் இருக்கும். இந்தத் தவறை நகைச்சுவையாக கண்டித்திருக்கும் இயக்குநர் இந்தியக் கிராமங்களின் அசல் முகங்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

14 ஆண்டுகளாக இரவில் கிராமத்தார் யாரும் அந்த மரத்தின் பக்கம் போவதில்லை. காரணம் அங்கு பேய் இருப்பதாக நம்பிக்கை. ஆனால் அதற்கு பின்னால் இயக்குநர் வைத்திருக்கும் சுவாரஸ்ய கதை அல்டிமேட் நகைச்சுவை. கிராமத்து மருமகனாக வருகிறவர் செய்யும் பந்தா, பக்கத்து ஊரில் சில இளைஞர்களுடன் மோத துப்பாக்கி சகிதமாக கிளம்பும் நால்வர் குழு என இந்த வெப்சீரீஸின் அனைத்து எபிஸோடும் ரசனை. முதல் எபிசோடு கதாபாத்திர அறிமுகத்திற்கானது என்பதால் கொஞ்சம் ஸ்லோ. இரண்டாவது எபிசோடில் பிடிக்கும் காமெடி வேகம் ஆறாவது எபிசோடு வரை நீள்கிறது. ஏழாவது எபிசோடு தான் இந்த எட்டு எபிசோடுகளிலும் ரொம்பவே சுமார் என்றாலும் எட்டாவது எபிசோடான கிளைமேக்ஸ் எபிசோடை பார்த்த பிறகு நீங்கள் முழு திருப்தியுடன் லாக்அவுட் செய்யலாம்.

ஊர் முக்கியஸ்தரின் மனைவி மஞ்சு தேவியாக நடித்திருப்பவர் நீனா குப்தா. 1994’ல் வெளியான ‘ஊ சோக்ரி’ படத்தில் இளம் விதவையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றவர். மஞ்சு தேவியின் கணவராக நடித்திருக்கும் ரகுபீர் யாதவ் ஒரு, பன்முக ஆளுமை. இரண்டு முறை சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த மாதம் வெளியான இந்த இந்தி மொழி இணையத் தொடரான ‘பஞ்சாயத்’ல் இவ்விருவரின் நடிப்பும் பலம்.


இசை, களத்தேர்வு, ஒளிப்பதிவு என அனைத்திலும் இந்தியக் கிராமங்களின் நகைச்சுவை முகம் பதிவாகியிருக்கிறது. இக்கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜித்தேந்தர் குமார் இதற்கு முன் தி வைரல் பீவர் உள்ளிட்ட இணைய தொடர்களில் நடித்திருக்கிறார்., என்றாலும் இத்தொடரில் அவரது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. பஞ்சாயத் போன்ற இணைய தொடர்களின் வெற்றி பல இளம் படைப்பாளிகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அமேசான் பிரைமில் கிடைக்கும் இந்த பஞ்சாயத் தொடர் தான் இப்போது வைரல்.