சினிமா

ஆஸ்கரே எனக்கு சாபமாக மாறிவிட்டது - பாலிவுட் பற்றி ரசூல் பூக்குட்டி வேதனை

ஆஸ்கரே எனக்கு சாபமாக மாறிவிட்டது - பாலிவுட் பற்றி ரசூல் பூக்குட்டி வேதனை

webteam

அண்மையில் பண்பலை வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னை எதிர்த்து ஒரு கூட்டமே செயல்படுவதாக பாலிவுட்டில் மறுக்கப்படும் வாய்ப்புகள் பற்றிப் பேசி புயலைக் கிளப்பினார் ஏஆர். ரகுமான். அதைத் தொடர்ந்து ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

“ஆஸ்கர் விருதுக்குப் பிறகு இந்திப் படங்களில் பணியாற்ற என்னை ஒருவரும் அழைக்கவில்லை” என்று அவர் வருத்தப்பட்டுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் பெற்ற ரசூல் பூக்குட்டி, ரகுமான் பற்றிய இயக்குநர் சேகர்கபூரின் டிவிட்டர் செய்திக்குப் பதிலளித்துள்ளார்.  

“உண்மையில் மனமுடைந்துவிட்டேன். ஒருவரும் இந்திப் படத்தில் பணியாற்ற அழைக்கவில்லை. ஆனால் வட்டாரப் படங்களில் தொடர்ந்து பணியாற்றினேன். சில படத்தயாரிப்பு நிறுவனங்கள், நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்றார்கள். நான் இன்னும் என் தொழிலை நேசிக்கிறேன், அதற்காக” என்று தெரிவித்துள்ளார்.

“எனக்கு கனவு காண்பது எப்படி என்று சினிமா கற்றுக்கொடுத்தது. சில நல்ல மனிதர்கள் என்மீது நம்பிக்கை வைத்தார்கள். என்னை நம்பினார்கள். அவர்கள் இன்னும் எனக்கு செய்துகொண்டே இருக்கிறார்கள். நான் எளிதாக ஹாலிவுட் படவுலகிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யமாட்டேன். இந்தியாவில்தான் என் வேலை இருக்கிறது. இங்குதான் ஆஸ்கர் வாங்கினேன். நான் ஆறு முறை பரிந்துரை செய்யப்பட்டேன். வென்றேன். இங்கே செய்த வேலைகளுக்காகத்தான் அதெல்லாம் கிடைத்தது. என்னை எப்போதும் ஓடவைக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள்மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று விவரித்துள்ளார் ரசூல் பூக்குட்டி.

“ஆஸ்கரே எனக்கு சாபமாகவும் மாறிவிட்டது” என்று வருத்தம் பொங்கப் பதிவில் தெரிவித்துள்ள அவர், “நீங்கள் உலகின் உச்சியில் இருக்கும்போது யாராவது உங்களை நிராகரித்தால், அதுதான் மிகப்பெரிய ரியாலிட்டி செக்” என்கிறார்.