சினிமா

ரஜினியையும் என்னையும் பிரிக்க முடியாது: கமல்ஹாசன்

ரஜினியையும் என்னையும் பிரிக்க முடியாது: கமல்ஹாசன்

webteam

ரஜினிகாந்துக்கு தாமதமாக ஐகான் விருது அறிவித்திருந்தாலும் தக்க மனிதரைதான் கவுரவித்திருக்கிறார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல் அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார். 

நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம், வைரமுத்து, நாசர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:

ரஜினிகாந்துக்கு தாமதமாக ஐகான் விருது அறிவித்திருந்தாலும் தக்க மனிதரைதான் கவுரவித்திருக்கிறார்கள். நடிக்க தொடங்கிய முதல் வருடத்திலேயே அவர் ஐகான் தான். தன்னை பற்றி நினைத்துக்கொள்ளாமல், படம் பற்றி அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை என்னில் சற்றும் குறையாதது. அவர் பாணி வேறு, என் பாணி வேறு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. 

ஏவிஎம் வேப்பமரத்தடியில் நின்று நாங்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது. எங்கள் முதல் ரசிகரும் விமர்சகரும் நாங்கள்தான். எங்களையே நாங்கள் பாராட்டிக்கொள்வோம், விமர்சித்துக் கொள்வோம். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ரசிகர்கள்தான். அது மணிரத்னத்துக்கும் வைரமுத்துவுக்கும் பொருந்தும். நாங்கள் ஆசை பட்டதை மணிரத்னமும் நானும் செய்துகொண்டிருக்கிறோம். இங்க கற்றுக் கொள்வதற்காக எந்த வசதியும் கிடையாது. 

’தளபதி’ பட டைட்டில் முடிவு பண்ணும்போது என் காதில் அதை ரஜினி சொன்னார். என் காதில் ’கணபதி’ன்னு கேட்டது. எப்படின்னு கேட்டார். ’நல்லா இல்லை’ன்னு சொன்னேன். ஏன்?ன்னு அவருக்கும் புரியல. பிறகுதான் ’தளபதி’ன்னு சொன்னார்.
பிரமாதம்னு சொன்னேன். 

எங்க ரசிகர்கள் இன்னும் மோதிட்டு இருக்காங்க. அவங்க நாங்க பேசிட்டு இருக்கிறதை பார்த்தா, என்ன நினைப்பார்களோ? நாங்களும் விட்டுடோம். இரண்டு கோல் போஸ்ட் இருந்தால்தான் நல்லாயிருக்கும்.

ஒரு கட்டத்துல, நான் ஒதுங்கிரலாம்னு இருக்கேன்னு கேட்டார் ரஜினி. அவர் கேட்ட இடத்தை பாருங்க... எங்கிட்ட கேட்டார். எனக்கே அந்த நிலைதான். ஆனால் ஒதுங்கக் கூடாதுன்னு சொன்னேன். நீங்க ஒதுங்கினா, என்னையும் ஒதுங்கச் சொல்வார்கள் என்று சொன்னேன்.

இங்கே பாலசந்தரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறோம். கூடிய விரைவில் ராஜ்கமலின் 50 படம் பற்றிய அறிவிப்பு பிரமாண்டமாக வரும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை. நானும் மணிரத்னமும் தனித்தனி அலுவலகம்
வைத்திருந்தாலும் எங்கள் கனவு ஒன்றுதான்.

சினிமாவில் கோபம், அவமரியாதை, பொறாமை எல்லாம் இருக்கும். சிலர் போட்டுக் கொடுப்பார்கள். யார் எதை சொன்னாலும் நாங்கள் இருவரும் அதை பேசிக்கொள்வோம். அதற்குப் பிறகு போட்டுக் கொடுப்பது குறைந்திருக்கிறது. எங்களை பிரிக்க முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.