இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள "நெஞ்சில் துணிவிருந்தால்" நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.அதையொட்டி இப்படத்தில் பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி பாடலாசிரியர் வைரமுத்து பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து வைரமுத்து சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் அவர் “இந்தப் படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்தப் படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்தப் படம் இயங்குகிறது. இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்கு கிடைத்த பெருமையாகும்.”என்றார்.
மேலும் “சுசீந்திரன் எனக்கு எப்பொழுதுமே ஒரு சுதந்திரம் தருவார். எழுதி கொடுத்து இசையமைக்கலாமே என்று அவர் புன்னகையோடு கேட்கின்ற போது நான் மகிழ்ந்து போவேன். அப்படி எழுதி கொடுத்து இமான் இசையமைத்து ஒரு பாடல் இந்தப் படத்தில் உள்ளது. அது அனைவராலும் முணுமுணுக்கப்படும் என நம்புகிறேன். அறம் என்பது என்ன, தர்மம் செய்வது மட்டுமே? அன்னமிடுவது மட்டுமே? அள்ளித்தருவது மட்டுமே?இல்லை. அறத்தின் எல்லைகளை இந்தப் படம் விரிவு செய்கிறது. அதை என் வரி உறுதி செய்கிறது. எண்ணம் அறிந்து ஏழை பசிக்கு அன்னமிடுவது அறமாகும். அறிமுகம் இல்லா நோயாளிக்கு ஆப்பிள் தருவது அறமாகும். சொந்தகாரனுக்கு தருவதல்ல அறம், நண்பனுக்கு அள்ளித்தருவதல்ல அறம், தெரிந்த முகத்திற்கு தருவதல்ல அறம். தெரியாத முகத்திற்கு, அறிமுகம் இல்லா முகத்திற்கு எவன் ஒருவன் தருகின்றானோ அதுதான் அறம். முத்து செறிந்த கிழவி நெற்றியில் முத்தம் தருவது அறமாகும். இரத்த பந்தம் இல்லாதவருக்கு இரத்த தானமும் அறமாகும். குற்றம், ஊழல் காணும் இடத்தில் கோவம் என்பது அறமாகும். யுத்தத்தில் கொலை தான் தர்மம். இந்த சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்தப் படம் முன்னிலை படுத்துகிறது.”என்றார்.