சினிமா

நடிகை மேக்னா ராஜை மருத்துவமனையில் சந்தித்த பகத் பாசில் நஸ்ரியா ஜோடி

நடிகை மேக்னா ராஜை மருத்துவமனையில் சந்தித்த பகத் பாசில் நஸ்ரியா ஜோடி

sharpana

குழந்தையை பிரசவித்துள்ள நடிகை மேக்னா ராஜை பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சந்தித்து வந்துள்ளனர் பகத் பாசில்,நஸ்ரியா தம்பதியினர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மேக்னா ராஜ். தமிழை விட இவருக்கு கன்னட சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரவே, அங்கு முன்னணி நடிகையானார். கன்னட சினிமாவில் தன்னுடன் நடித்த சக நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை பத்து ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டுதான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் பேரன்பின் அடையாளமாக மேக்னா ராஜ் கருவுற்றிருந்தார். அந்த சமயத்தில்தான், கடந்த ஜூன் 7 தேதி சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தென்னிந்திய சினிமா துறையே இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. காரணம், சிரஞ்சீவி சார்ஜா கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் மட்டுமல்ல. நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்னா ராஜூம் ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் நடித்திருந்த  நடிகை பிரமிளாவின் மகள்.

உயிரற்று கிடத்தப்பட்டிருந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடலைப் பிடித்து மேக்னா ராஜ் கதறி அழுதது எல்லோரது இதயத்தையும் கசிய வைத்தது. மறக்கவே முடியாத துயரக்காட்சி அது. இந்நிலையில், சமீபத்தில்தான் மேக்னா ராஜ்  உயிரிழந்த தனது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயரக் கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்தியதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேக்னா ராஜுக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் ’ஜூனியர் சிரு’ பிறந்துவிட்டான் என்று கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், மலையாள சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான பகத் பாசில், நஸ்ரியா தம்பதியினர் மேக்னா ராஜையும் அவரது குழந்தையையும் கேரளாவிலிருந்து பெங்களூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதோடு, சிரஞ்சீவி சார்ஜாவின் பண்ணை வீட்டுக்கும் சென்று, இத்தம்பதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘maad dad' படத்தில் நஸ்ரியாவும் மேக்னா ராஜூம் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்தே,இருவரும் நெருங்கிய தோழிகள். மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்த தகவலை முதலில் பகிர்ந்து கொண்டவர்களில் நஸ்ரியாவும் ஒருவர்.