சினிமா

நடிகை நளினி நேகி மீது சரமாரி தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு

நடிகை நளினி நேகி மீது சரமாரி தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு

webteam

இந்தி சீரியல் நடிகை நளினி நேகி, தன்னுடன் தங்கியிருந்த பிரீத்தி ரானா என்ற பெண்ணும் அவரது அம்மா சினேகலதா ரானாவும் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் அவர்கள் மீது ஒஷிவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாம்கரன் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்தவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவரா போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “சில வருடங்களுக்கு முன்பு நானும் பிரீத்தியும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தோம். சில நாட்கள் கழித்து நான் தனியாக இருக்க விரும்பினேன். எனவே அந்த குடியிருப்பை விட்டு வெளியேறி தனியாக வீடு பார்த்து தங்கினேன். 

இதையடுத்து சமீபத்தில் பிரீத்தி தனக்கு வீடு கிடைக்கவில்லை எனவும் அதனால் சிறுது நாட்கள் தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டார். நானும் அவள் தங்கி கொள்ள அனுமதித்தேன். நான் தங்கியிருக்கும் வீடு 2 பிஹெச்கே என்பதால் தங்கிக்கொள்ள அனுமதித்தேன். 

சிறிது நாட்கள் கழித்து பிரீத்தியின் அம்மா அவளுடன் தங்கினார். அவள் வீடு காலி செய்வதற்கு உதவியாக அவரது அம்மா வந்துள்ளார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அங்கேயே தங்க ஆரம்பித்தனர். அதனால் ஊரில் இருந்து என்னை பார்க்க எனது பெற்றோர் வருவதால் வீட்டை காலி செய்யுங்கள் என அவர்களிடம் கூறினேன். சரி என்று அவர்களும் ஒப்புக்கொண்டனர். 

ஆனால் கடந்த 21 ஆம் தேதி நான் எனது நண்பருடன் உடற்பயிற்சி மையத்திற்கு கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உங்களுக்கு என்னாச்சு என்று கேட்டேன். உடனே தான் தகாத வார்த்தைகளால் திட்டினேன் என பிரீத்தியிடம் அவரது அம்மா புகார் தெரிவித்தார். 

இதையடுத்து நான் சொல்வதை காதில் வாங்காமல் பிரீத்தி என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே அவரது அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் என் முகத்தில் அடித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். கிட்டதட்ட என்னை அவர்கள் கொன்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.