சினிமா

மின்னலே மூலம் ஒளிர்ந்த 'மெலடி கிங்' ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று!

மின்னலே மூலம் ஒளிர்ந்த 'மெலடி கிங்' ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று!

webteam


'அடை மழை வரும் அதில் நனைவோமே' என்ற வசீகரா பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார் ஹாரிஸ். அது போலவே மெலடிகளை மழையாக கொடுத்து இசையில் நனைய வைத்த மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்த நாள் இன்று. மின்னலே படத்தின் தீம் இசை இன்றும் பலரது செல்போன்களில் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஹாரிஸின் மேஜிக். முதல் படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஹாரிஸின் இரண்டாவது படம் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. மஜ்னு திரைப்படம் மூலம் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தார் அவர். மஜ்னு படத்தின் 'முதற்கனவே பாடல்' இன்றும் பலரது பேவரைட் ரகம். அதன்பின் ஹாரிஸ் ஜெயராஜ் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவரானார்.

12 பி, சாமுராய், லேசா லேசா என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை கொடுத்தார் ஹாரிஸ். சாமுராயின் 'மூங்கில் காடுகளே' பாடலை கண் மூடி கேட்டால் நாம் எங்கேயோ மலைக்காடுகளில் பயணிப்பது போலவே இருக்கும். அந்த ரியாலிட்டி நிலையை இசையால் மனதுக்கு கொடுத்தவர் ஹாரிஸ். குறிப்பாக லேசா லேசா படத்தின் ஹீரோ ஹாரிஸ்தான் என்றும் சொல்லும் அளவுக்கு அவரது இசை இருக்கும். 'லேசா லேசா' பாடல், 'ஏதோ ஒன்று ஏதோ ஒன்று' பாடல் எல்லாம் பல்வேறு தளங்களிலும் எதிரொலித்தன.

'ஏதோ ஒன்று ஏதோ ஒன்று' பாடல் இன்றும் பலரது செல்போன் பிளேலிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கும். சிலருக்கு ஒரு கூட்டணி அழகாக அமைந்துவிடும், அப்படி ஹாரிஸுக்கு கவுதம் மேனன் சரியான கூட்டணியாக அமைந்தார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என கவுதமுடன் கோர்த்த அனைத்து படங்களும் இசையில் தனி சாம்ராஜ்யம் செய்தன. இவர்களது கூட்டணியின் அச்சாரமாய் இருந்தது தாமரையின் வரிகள். கவுதம் - ஹாரிஸ் - தாமரை என்றாலே அது ஹிட் என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் 'கற்க கற்க' பாடல் ஒரு மாஸ் என்றால் 'பார்த்த முதல் நாளே' பாடல் ஒரு அழகான மெலடி லெவல். இப்படி ஒவ்வொரு படத்திலும் பல்வேறு இசைக்கோர்ப்புகள் மூலம் ரசிக்க வைத்தார் ஹாரிஸ். பல இடங்களில் அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு அவ்வளவு மெருகூட்டும்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு அருண் விஜயை நோக்கி செல்லும் காட்சியில் வரும் பிஜிஎம் பார்ப்பவர்களை புல்லரிக்கச் செய்யும். ஹாரிஸிடம் இயக்குநர் ஷங்கர் இணைந்த அந்நியன், நண்பன் ஆகிய படங்களும் ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு இணையாகவே இருந்தன.

கஜினி, அயன், உன்னாலே உன்னாலே, பீமா, எங்கேயும் காதல், கோ, இரண்டாம் உலகம் என பல ஹிட் ஆல்பங்களை அடுக்கிக் கொண்டு இருந்த ஹாரிஸ் மீது ஒரே மாதிரியான இசை, வேறு இசையின் தாக்கம் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை கொடுத்த ஹாரிஸிடம், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இடைவெளி விடத்தொடங்கியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இடையிடையே வந்த படங்களிலும் தொடக்க கால ஹாரிஸின் டச் இல்லை என கூறப்பட்டது.

பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய காப்பான் திரைப்படத்திலும் பிஜிஎம் ஏரியாவில் ஹாரிஸ் மீது விமர்சனங்கள் எழுந்தன. பல இசையமைப்பாளர்கள் வந்தாலும், ஹாரிஸின் டச் என்று சொல்லும் பல பாடல்கள் இன்றும் பிளே லிஸ்டில் முன்னணி வரிசையில் இருக்கின்றன. ஹாரிஸுக்கான இடம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்களின் பேவரைட் லிஸ்டிலும் அப்படியே இருக்கின்றன. மீண்டும் வந்து தன் இடத்தை நிரப்பிக் கொண்டு ஹாரிஸ் மறு ஓட்டத்தை தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மீண்டு(ம்) வாருங்கள் ஹாரிஸ்.