Adipurush Adipurush
திரை விமர்சனம்

Adipurush review | இதுதான் அந்த 500 கோடி பிரமாண்டமா ஆதிபுருஷ் டீம்..?

அமேச்சுரான VFXஐ சகித்துக்கொண்டாலும், கதையாக ஈர்க்கிறதா என்றால், இடைவேளை வருவதற்குள்ளாகவே பழைய டீசல் காரில் கொடைக்கானல் மலை ஏறுவது போல படத்தின் திரைக்கதை திணறுகிறது.

karthi Kg

ஆதிபுருஷின் ஒன்லைன் என்னவென்றால் , 'ராமாயணத்துக்கு என்னங்க புதுசா ஒன்லைன்' எல்லொருக்கும் தெரிந்த கதை தான்.

ஆதிபுருஷ்

வனவாசத்தில் ஆரம்பித்து, ராவணனை ராமன் வீழ்த்தும் வரையிலான புராண கதையைச் சொல்கிறது இந்த ஆதிபுருஷ். எல்லோருக்கும் தெரிந்த கதை; சிறுவயதில் புத்தகத்தில் படித்த கதை; கார்ட்டூன்களில் பார்த்த கதை;ஈஸ்ட்மென் கலரில் வந்த திரைப்படங்கள்; ராமாயணம் டிவி சீரியல்கள் என ராமாயணத்தின் ஒன்லைன் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா, டிவி சீரியல் எல்லாம் பார்க்காத பிளாக் & ஒயிட் காலத்து நபர்கள் என்றாலும், வால்மீகி எழுதியது, கம்பர் எழுதியது என ராமாயணத்திற்கான கதைகளும், அதையொட்டிய கிளைக் கதைகளும் இங்கு ஏராளம். மகாபாரதம் அளவுக்கு சிக்கலான கதையும் அல்ல. மிகவும் எளிய கதை. ஆனால், அதை எப்படி ஒவ்வாமை வரும் அளவுக்கு எடுத்தார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

ராமராக பிரபாஸ். படத்தில் ராகவர் என்றே அழைக்கப்படுகிறார். ராமருக்கு எப்படி மீசை இருக்கலாம். பொருத்தமாகவே இல்லை என ஒரு பக்கம் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், பிரபாஸே ராமர் வேடத்துக்கு பொருத்தமாக இல்லை என்பது தான் பெருந்துயரம். அதிலும் தசரதனும் பிரபாஸ் தான். ஹரே கிருஷ்ணா..!

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாக எல்லாப் படங்களும் ,' ஐயோ அது பாதாளக்கிணறு' மோடில் தான் இருக்கின்றன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சலாராவது பிரபாஸுக்குக் கைகொடுக்கும் என நம்பலாம்.

ஆதிபுருஷ்

சீதை என்னும் ஜானகியாக கீர்த்தி சனோன். அப்படியே ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த கதாபாத்திரம் பற்றிப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த பர்னிச்சரையும் ஒன்றாய் உடைத்த இடம் லங்கேஸ்வரம் எனப்படும் இலங்கை தான். ராவணனாக சைஃப் அலி கான். பத்து தலைகளை வைத்துக்கொண்டு ஜானகியிடம் பேசும் காட்சியை எப்படி நினைத்து எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் பார்க்கும் நமக்கு அந்நியன் விக்ரம் , ' அந்த அஞ்சு கொலையும் நான் பண்ணல... நாந்தாண்டா பண்ணினேன்' டோனில் தான் இருந்தது. ராவணனுக்கு எதுக்கு Dissociative identity disorder எல்லாம் இருப்பது போல் எடுத்திருக்கிறார்கள் என்பது இயக்குநர் ஓம் ராவுத்திற்கே வெளிச்சம். அதிலும் புராணத்தை நாங்கள் அப்படியே எடுக்கவில்லை. சில மாறுதல்கள் செய்திருக்கிறோம் என்கிற துறுப்புச்சீட்டு வந்தபோது நாம் கொஞ்சம் உஷாராகி இருக்க வேண்டும். சமயோஜிதமாக தப்பித்துக்கொள்ளாமல் சிக்கியது நாங்கள் செய்த பிழை தான். பத்து தலையை ஒன்றாய் காட்டினால் பெரிய திரையில் இடம் போதாவிட்டால் என்ன செய்வதென எண்ணி, இரண்டு வரிசைகளில் ஐந்து ஐந்து தலைகளாக காட்டியிருக்கிறார்கள்.ஏம்பா தலைவலி தைலம் விளம்பரத்துல கூட ராவணன் அழகா பத்து தலையோட வருவாரேப்பா..!. இதெல்லாம் பத்தாது என நினைத்த யாரோ, சைஃப் அலி கானை சற்று ஸ்டைலாக நடக்க சொல்லியிருக்கிறார்கள். ' கோவில் பட வடிவேலு' கூடையைக் கட்டிக்கொண்டு நடப்பாரே அது எவ்வளவோ தேவலாம்.

ஆதிபுருஷ்

அது போக, ராவணனுக்கு ஹேர் ஸ்டைலில் பூரான் வேறு விட்டிருக்கிறார்கள். என்னப்பா நீங்க ' வல்லவன் ஸ்கூல் சிம்பு ஹேர்ஸ்டைல்ல ராவணன காட்டறீங்க என நாம் யோசிப்பதற்குள்' ஹேர் கலரிங், கர்லிங் எல்லாம் செய்து மாடர்ன் டே கெட்டப்பில் வருகிறார் ராவணணின் மகாராணி. சோதிக்காதீங்கடா என அந்த மாளிகையைப் பார்த்தால், அந்த முழுக்க முழுக்க கிரேக்க , கோத்திக் டிசைனில் கட்டப்பட்டிருக்கிறது. ராவணனின் ஏவல் ஆட்கள் முழுக்க தானோஸிடமும் மற்ற மார்வெல் டிசி வில்லன்களிடமும் இருந்தும் குத்தககைக்கு வாங்கிவந்த ஆட்கள் போல இருக்கிறார்கள். இதில் சிலருக்கு ஸ்பார்ட்டகஸ் பாணி மாஸ்க் வேறு. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற சொன்ன எவரோ தான் ராவணன் & டீமுக்கான காஸ்டியூம், ப்ரொடக்‌ஷன் டிசைன் எல்லாம் செய்திருக்க வேண்டும்.

படத்தின் போஸ்டர், டீசர் என எல்லாவற்றிலும் பலமாக நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டது படத்தின் VFX தான். அத்தனை கோடிகளைக் கொட்டியும் உங்களால் இப்படியான ஒரு அவுட்புட்டைத்தான் தர முடியுமா என்பதுதான் இணையவாசிகளின் கேள்வியாக இருந்தது. படம் வருவதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என நம்பியவர்களைத்தான் பிராங்க் செய்திருக்கிறது ஆதி புருஷ் டீம். ஒரு ஏங்கிளில் சூர்ப்பனகையைவிட ராவணன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். அடுத்த பிரேமிலேயே இருவரும் ஒரே அளவில் இருக்கிறார்கள். ஒரு கார்ட்டூன் படத்தில் கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார் என்றெல்லாம் நம்பும்படி இருந்திருக்கும். ஏனெனில் பிரபாஸ், சைஃப் அலி கான் என எல்லோருமே கார்ட்டூனில் வார்த்து எடுத்தது போலத்தான் இருக்கிறார்கள்.

Adipurush review

அமேச்சுரான VFXஐ சகித்துக்கொண்டாலும், கதையாக ஈர்க்கிறதா என்றால், இடைவேளை வருவதற்குள்ளாகவே பழைய டீசல் காரில் கொடைக்கானல் மலை ஏறுவது போல படத்தின் திரைக்கதை திணறுகிறது. இரண்டாம் பாதி முழுக்க யுத்த காண்டம் தான். ஆனால் அதில் இந்திரஜித் தவிர யாருடையோ கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக எழுதப்படவில்லை. எல்லா திரையரங்குகளிலும் அனுமாருக்கு ஒரு சீட் ஒதுக்கலாம் என்பதில் இருக்கும் கிரியேட்டிவிட்டிகூட படத்தில் இல்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

படத்தின் பெரும்பலம் சஞ்சித் பல்ஹரா, அன்கில் பல்ஹராவின் பின்னணி இசை. சுமாரான காட்சிகளால் கூட நமக்கு கூஸ்பம்ஸ் வரும் என்பதற்கு இவர்களின் பின்னணி இசை ஒரு உதாரணம்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள்; கேம் ஆஃப் த்ரோன்ஸ், சக்திமான் மாதிரியான ஃபேண்டஸி கதைகள் என பலவற்றை பெரிய திரையில் லயிக்க லயிக்க பார்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லா பார்வையாளனுக்கும் உண்டு. அதே அளவு ஆசை அத்தகைய கதைகளை திரைப்படமாக எடுக்கவிருக்கும் கதாசிரியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் அவா. ஆதிபுருஷ் கடந்த போக வேண்டிய ஒரு துன்பவியல் சம்பவம்.