மற்றொரு வழக்கில் மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ''தன்னை யாரும் கைது செய்ய முடியாது'' என அவர் பேசி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடுத்து வந்தவரை, கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ''சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று மீரா மிதுன் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனிடம் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.