சினிமா

'ஜன.13-ல் ’மாஸ்டர்’ ரிலீஸ்!' - ஓ.டி.டி.க்கு விஜய் ஒப்புக்கொள்ளாததன் பின்புலம்

'ஜன.13-ல் ’மாஸ்டர்’ ரிலீஸ்!' - ஓ.டி.டி.க்கு விஜய் ஒப்புக்கொள்ளாததன் பின்புலம்

sharpana

’விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் பொங்கலையொட்டி ஜனவரி 13  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும்’ என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக எங்களிடம் கூறியுள்ளார்கள் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திரையரங்கில் மட்டுமே மாஸ்டர் வெளியிடப்படும் என விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் ஓ.டி.டி யில் வெளியிட்டிருக்கலாம். அதை அவரகள் செய்யாமல் இருந்ததற்கு மனபூர்வமான நன்றி. ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என  மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டுக்கொண்டு 'மாஸ்டர்' படத்தை கேட்டனர்.

(திருப்பூர் சுப்ரமணியம்)

ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும். மாஸ்டர் படம் ரிலீஸ் ஆன பின்புதான் அடுத்த பட ஷூட்டிங் செல்ல வேண்டும் என விஜய் காத்துக் கொண்டிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் பெரிய நடிகர்கள் அந்தந்த மாநில முதல்வரை போய் சந்திக்கின்றனர். அதேபோல, விஜய் முதல்வரை சந்தித்துள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.  

விஜய் , முதல்வரை சந்தித்ததை வரவேற்கிறோம். பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்களின் கட்டணக் குறைவுக்கு முயற்சிப்போம். நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது.  திரையரங்கை புறக்கணிக்கும் நடிகர்களின் படத்தை நாங்களும் புறக்கணித்தால் என்ன தவறு? அது பற்றிய இறுதி முடிவை சங்கத்தின் மூலம் ஆலோசித்து சொல்வோம்” என்று அவர் கூறினார்.