mansoor alikhan pt web
சினிமா

“மன்னித்துவிடு என சொல்லவில்லை; அது வார்த்தைப் பிழையாகிவிட்டது” - மன்சூர் அலிகான் திடீர் விளக்கம்

”நான் மன்னித்துவிடு என கூறவில்லை மரணித்துவிடு என கூறினேன்” என தெரிவித்ததாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Angeshwar G

நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார் மன்சூர் அலிகான். அந்த மன்னிப்பை த்ரிஷாவும் ஏற்றிருந்தார்.

த்ரிஷா - மன்சூர் அலிகான்

முன்னதாக நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகி இருந்தது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து த்ரிஷா, “அவர் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவருடன் இனிமேல் சேர்ந்து நடிக்கமாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் லோகோஷ் கனகராஜ், பாடகி சின்மயி, நடிகை குஷ்பூ, மேலும் பல திரைப்பிரபலங்களும் பொது மக்களும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரம் வழக்காகவும் பதிவானது. இதற்காக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜரானார் மன்சூர் அலிகான். இதனை அடுத்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில், “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!

மன்சூர் அலிகான் பதில்

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மன்சூர் அலிகானின் அறிக்கைக்கு த்ரிஷாவும் ரியாக்ட் செய்திருந்தார். அதில் அவர், “To err is human, to forgive is divine” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருந்த மன்சூர் அலிகான், “அடக்க நினைத்தால் அடங்கமறு, திரைநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு. இது தான் நான் சொன்னது. தொலைபேசி வாயிலாக என்னை மரணித்துவிடு என தெரிவித்ததை மன்னித்துவிடு என பிஆர்ஓ தவறாக புரிந்துகொண்டார். மரணித்துவிடு என கூறியது மன்னித்துவிடு என வார்த்தை பிழையாகிவிட்டது. எனக்கே அதிர்ச்சியில் இருந்து மீழ முடியவில்லை. மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டேன். ” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.