சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க, திரையுலத்தினர் பலரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடக்கத்தில் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று சொன்ன மன்சூர் அலிகான், விசாரணைக்கு ஆஜரான பின் அடுத்தடுத்த நாட்களில் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். அதன்பின்னர் இதுதொடர்பாக, ட்வீட் செய்த த்ரிஷாவும் “தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்” என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால், நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகை த்ரிஷாவிடம் போலீஸார் கேட்டிருந்தனர். இதற்கு பதிலளித்த த்ரிஷா, “மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்திற்கு இதோடு முடிந்துவிட்டது என்றே சொல்லப்பட்டது. இருப்பினும் தற்போது மன்சூர் அலிகான் புதிதாக இன்னொரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை த்ரிஷா மீது மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் த்ரிஷா போலவே சிரஞ்சீவி, குஷ்பு மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அனைவருமே தலா ரூ.1 கோடி தனக்கு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர். இதனால் இப்பிரச்னை, மீண்டுமொருமுறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இது எப்படி போகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.