பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவுடனான திருமணத்துக்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா, ’36 வயதினிலே’ படம் மூலம் சினிமா கேரியரில் இரண்டாவது இன்னிங்ஸை சிக்ஸருடன் தொடங்கினார். இதையடுத்து ’குற்றம் கடிதல்’ படம் மூலம் கவனம் ஈர்த்த பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். மகளிர் மட்டும் படத்துக்காக சூர்யாவிடன் புல்லட் ஓட்டக் கற்றுக் கொண்ட ஜோதிகா, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புல்லட்டுடன் கம்பீரமாகக் காட்சியளித்தார். இந்தநிலையில், மகளிர் மட்டும் படத்தில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜோதிகாவுடன், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் காரில் அவுட்டிங் போவது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தனது வாழ்நாளில் சுட்ட தோசைகள் மொத்தம் எத்தனை என பானுப்ரியா கணக்கு போடுவது போன்ற வசனம் ரசிக்க வைக்கிறது. டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பசங்க இயக்குனர் பாண்டிராஜ், இனி தோசை சாப்பிடும்போதெல்லாம் இந்த வசனம் தான் நினைவுக்கு வரும் என்று பாராட்டியுள்ளார்.