சினிமா

மெர்சல் தலைப்பு விவகாரம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

மெர்சல் தலைப்பு விவகாரம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

webteam

மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தற்சமயம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பட நிறுவனத்தின் 100வது படைப்பாக இந்தப் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதை அட்லி இயக்கி வருகிறார். இந்தத் தலைப்பு தங்கள் படத் தலைப்பை தழுவி இருப்பதாக கூறி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது பட தலைப்பான மெர்சலாயிட்டேன் என்பதை 2014ம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்திருந்ததாகவும் அதற்கான உரிமையை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துள்ளதாகவும் கூறிய அவர், இந்தத் தலைப்பை பயன்படுத்த கூடாது என்றும் விளம்பரபடுத்த கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது என 3 ஆம் தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விவாகரத்தில் தேனாண்டாள் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று நீதிபதி அனிதா சுமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வருகிற 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அதுவரை மெர்சல் என்ற பெயரில் விளம்பரம் செய்யக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்தார். விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்கிற தலைப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது வருகிற வெள்ளிக்கிழமைதான் தெரியவரும்.