சினிமா

"வெயிட்டிங் ஓவர்" பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரிலீஸாகும் மாஸ் திரைப்படங்கள் -ஓர் தொகுப்பு

"வெயிட்டிங் ஓவர்" பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரிலீஸாகும் மாஸ் திரைப்படங்கள் -ஓர் தொகுப்பு

சங்கீதா

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள், கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அறிவிப்பு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஊரடங்குகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த படங்கள் எப்போது வெளியிடப்படுகின்றன என்பது குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

வீரமே வாகை சூடும்

ரிலீஸ் ரேஸில் முதலாவதாக முந்திக்கொண்டுள்ள படம் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’. கடந்த ஜனவரி 26-ம் தேதி ‘வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருந்த நிலையில், கொரோனா சூழலால் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு. தற்போது வரும் 4-ம் தேதி ‘வீரமே வாகை சூடும்’ படம் திரையரங்குகளில் ரிலீசாகிறது. அதேநாளில் தெலுங்கிலும் ‘சாமாயனிடு’ என்ற பெயரில் வெளிவருகிறது. ‘எனிமி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள்.

கடைசி விவசாயி

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இந்தப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்தத் திரைப்படம், வரும் பிப்ரவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி படும் கஷ்டத்தையும், விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இந்தப்படத்தின் திரைக்கதை இருக்கும் என கூறப்படுகிறது.

எஃப்.ஐ.ஆர்.

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நாயகனாக வரும் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரப் பெயர் ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ். இதன் முதல் எழுத்துக்களை வைத்து ‘எஃப்.ஐ.ஆர்’. என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். தீவிரவாதம் குறித்த கதையிது என்று கூறியுள்ளது படக்குழு. இதில் விஷ்ணு விஷாலுடன் முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ மேனன், மஞ்சிமா மோகன், ரெபேகா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். மனு ஆனந்த் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம், பிப்ரவரி 11-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

வலிமை

நடிகர் அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில், ‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு, 2-வது முறையாக தயாரானப் படம் ‘வலிமை’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே பொங்கலையொட்டி, கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ திரைப்படம் கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 24-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில், ‘வலிமை’யின் அனுபத்தை பெறுங்கள் என அதன் தயாரிப்பாளர் போனி கபூர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப்படத்தில் ஹுமா குரோஷி நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

எதற்கும் துணிந்தவன்

நடிகர் சூர்யா - இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில், ‘பசங்க 2’ படத்திற்கு, 2-வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணிப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா சூழலால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 10-ல் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் ராய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ராதே ஷ்யாம்

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், நடிகர் பிரபாஸின் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவான படம் ‘ராதே ஷ்யாம்’. கடந்த 2019-ம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கடந்த வருடமே வெளியாகியிருந்திருக்க வேண்டிய இந்தத்திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஜனவரி 2022-ல் பொங்கல் ரிலீஸூக்கும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை வெளியிடவும் படக்குழு முயன்றது. ஆனால் அதுவும் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம், மார்ச் 11-ம் தேதி பிரம்மாண்டமாக. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்.) பான் இந்தியா படம், பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. 'பாகுபலி'க்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஆர்.ஆர்.ஆர்.' கவனம் ஈர்த்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7-ம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்புகூட நடத்தியது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கெரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 அன்று வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படம் வரும் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இணைந்துள்ளார். முக்கிய வேடத்தில் காளி வெங்கட், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘டான்’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அக்டோபரில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், ‘டான்’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எனினும் இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைகா நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ஆகையால் ஒரே தேதியில் ஒரு நிறுவனத்தின் இரண்டு படங்கள் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் ‘டான்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், ரவிதேஜாவின் ‘கில்லாடி’ பிப்ரவரி 11-ம் தேதியும், பவன் கல்யானின் ‘பீம்லா நாயக்’ பிப்ரவரி 25 அல்லது ஏப்ரல் 1-ம் தேதியும், வருண் தேஜின் ‘கானி’ பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4-ம் தேதியும், ரவி தேஜாவின் ‘ராமா ராவ் ஆன் டியூட்டி’ மார்ச் 25 அல்லது ஏப்ரல் 15-லிலும், கே.ஜி.எஃப் 2 ஏப்ரல் 14-ம் தேதியும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10-ல் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் நேரடியாக ரிலீசாகிறது.