சினிமா

அமேசானை காக்க ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ ரூ.35 கோடி உதவி

அமேசானை காக்க ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ ரூ.35 கோடி உதவி

webteam

அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக, பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ 35 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதை அணைக்க பிரேசில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் அமேசான் காடு பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என ஹாலிவுட் நடிகர் லியோனார் டோ டி காப்ரியோ சில நாட்களுக்கு முன் கவலை தெரிவித்திருந்தார். பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் இதுபற்றி தங்கள் வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக, லியோனார்டோ டி காப்ரியோ, 35 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி யுள்ளார். வனங்களை பாதுகாக்க  டி காப்ரியோ தலைமையில் எர்த் அலையன்ஸ் (EARTH ALLIANCE) என்ற அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் சார்பில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கான நிதியம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் இருந்து நிதி திரட்டப்படுகிறது. முதல்கட்டமாக 35 கோடி ரூபாய் நிதியை லியோனார்டோ டி காப்ரியோ வழங்கியுள்ளார். இந்த நிதி அமேசான் காடுகளில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சென்று சேரும் என்று கூறப்படுகிறது.