leo first day collection file image
சினிமா

என்னது 145 கோடியா! முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த லியோ.. வெளியாகும் தகவல்கள்

லோகேஷ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியான லியோ திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுவபுருஷ்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் - விஜய் கூட்டணியில் மீண்டும் உருவான லியோ படத்திற்கு தொடக்கம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக LCU-ல் படம் இடம்பெறுமா என்பதே பிராதனமான கேள்வியாக இருந்து வந்தது. இதனையடுத்து பல பிரச்னைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையே நேற்று உலகம் முழுவதும் லியோ படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி ஆரம்பமானாலும் தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்கியது.

லியோ படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. முதல்பாதி நன்றாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதி சுமாராக இருந்ததாகவும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். இருப்பினும், விஜய்யின் நடிப்பு நன்றாக இருந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். துவக்க காட்சியில் இடம்பெற்ற ஹைனா தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சஞ்சய் தத், அர்ஜுன் போன்றவர்களின் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், முதல்நாளில் மட்டும் சர்வதேச அளவில் 120 - 145 கோடி ரூபாயை படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே அதிகப்படியாக முதல் நாளில் 113 கோடி ரூபாயை வசூலித்து 2.0 திரைப்படம் சாதனை படைத்திருந்தது. அதேபோல், ரஜினி நடிப்பில் வெளியான மற்றொரு படமான கபாலியும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், அந்த சாதனையை லியோ படம் மிஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படம் முதல் நாளில் உலக அளவில் 120 கோடி முதல் 145 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், இந்திய அளவில் சுமார் 80 கோடி அளவில் வசூலித்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

மிகப்பெரிய அளவில் ஹைப் கொடுக்கப்பட்டதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் உருவானதும் இந்த மிகப்பெரிய வசூலுக்கு காரணமாக அமைந்தது.

லியோ படம் உங்களுக்கு பிடித்திருந்ததா? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள்