சினிமா

காந்தாரா, பொன்னியின் செல்வன் இந்துக்களுடன் தொடர்புடையது - கங்கனா ரனாவத்

காந்தாரா, பொன்னியின் செல்வன் இந்துக்களுடன் தொடர்புடையது - கங்கனா ரனாவத்

சங்கீதா

மேற்கத்திய கலாசாரம் கொண்ட பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளதாகவும், ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றப் படங்கள் இந்துமத தொடர்புடையதாக இருப்பதால் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் காரணமாகத் தான், ‘தோனி’ பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக்கொண்டதாக கங்கனா ரணாவத் முன்வைத்த குற்றச்சாட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அங்கு நிலவும் போதைப் பொருள் உள்பட பல விஷயங்களை இவர் பேசி வருகிறார்.

இந்நிலையில், ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “இந்தியாவில் தற்போது வெளிவரும் படங்கள் இந்தியத் தன்மை நிறைந்தவையாக உள்ளது. ‘காந்தாரா’ படத்தை நாம் எடுத்துக்கொண்டால், அந்தப் படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சோழர்களைப் பற்றியது.

‘காந்தாரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் காட்சிகளை இந்து மதிப்புடைய விஷயங்களை பார்வையாளர்கள் தொடர்புப்படுத்தி பார்க்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால், பாலிவுட் நம் கலாச்சாரத்திலிருந்து விலகி, மேற்கத்திய (தாக்குதல்) திரைப்படங்களை உருவாக்குகிறது. மக்கள் இனி அவர்களது படங்களை தங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

நடிகர்களை ரோல் மாடலாக கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இப்போது சாமானியர்களுக்கும் தெரியும். நான் ஏன் ஸ்ரீராமரையோ அல்லது ஏபிஜே அப்துல் கலாமையோ அல்லது வேறு ஒருவரையோ ரோல் மாடலாக கொள்ளக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இந்த விழிப்புணர்வு நட்சத்திரக் கலாச்சாரத்தை முடித்துவிட்டது. நெப்போட்டிசம் தற்போதும் குறையவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.