சினிமா

'மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்பது என்ன வீம்பு?’: வைரலாகும் கமல்-விஜய்சேதுபதி உரையாடல்!

'மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்பது என்ன வீம்பு?’: வைரலாகும் கமல்-விஜய்சேதுபதி உரையாடல்!

webteam

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக நேரலையாக பங்கேற்று பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். அதில் கமல்ஹாசனின் சினிமா குறித்த கேள்வி ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி எழுப்பினார்.

அதில், சினிமாவில் உங்களுக்கான தனித்துவமான பாதையை, உங்கள் ரசனையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கமல்,

எனக்கும் பாலு மகேந்திராவுக்கும் இடையேயான நட்பு. பாலுமகேந்திரா உள்ளிட்டோர் அடங்கிய ஒரு கூட்டம் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என இருந்தவர்கள். நான் மலையாளத்தில் டெக்னீஷியனாக பணியாற்றிய போது ஒரு கேமராமேனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை ஒரு நடிகனாக பார்த்தார். நான் மீண்டும் திரைப்படம் தொடர்பாக படிக்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் வேண்டுமென்றார். தேவையானதை நானே சொல்லித் தருகிறேன் என்றார்.

பாலுமகேந்திராவுக்கு கமர்ஷியல் சினிமா மீது கோபம் இருந்தது. நான் அவர்களிடம் சண்டை போடுவேன். சினிமா தரம் குறையாமல் மக்களுக்கு சென்றடையும் படங்களை எடுத்தால் என்ன அவமானம் என்று கேட்பேன். அப்படி செய்யவே முடியாது என்பார். ஆனால் நானும் அவரும் அதைச் செய்தோம். அதுதான் மூன்றாம் பிறை.

சகலகலா வல்லவன் படத்தை எல்லாரும் திட்டினார்கள், பாலு மகேந்திராவும் திட்டுவார். நானும் கூட என்னை திட்டிக்கொள்வேன். பிறகு யோசித்தேன். அந்த வழியை நான் தொடவில்லை என்றால் ராஜ்கமலே தொடங்கி இருக்க முடியாது.

எனக்கு கார் வாங்க வேண்டுமென ஆசை, டிக்கெட் விற்கவேண்டுமென ஆசை, எம்ஜிஆர் போல ஆக வேண்டும், சிவாஜி போல ஆக வேண்டுமென ஆசை.. அப்படி என்றால் மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்பது என்ன வீம்பு? என் கலை புரியாத போது மக்களை அங்கே கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.