தனுஷ்-ஐஸ்வர்யா முகநூல்
சினிமா

“பிரிவதில் உறுதியாக இருக்கிறோம்” - குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரும் 27 ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு சென்னை குடும்பல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரிவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனும் நடிகருமான தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ட்விட்டரில் இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தனர். இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க குடும்பத்தினரும் நட்பு வட்டாரத்தினரும் முனைந்தபோதும் மணமுறிவு பெறுவதில் இருவரும் தீவிரம் காட்டியதால் முடிவுகள் சாதகமாக அமையவில்லை.

இதனையடுத்து, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த மனு 3 முறை விசாரணைக்கு வந்தபோதும் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் இணைவார்களா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.

இந்தவகையில், இன்று தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்த பட்சத்தில், 10.30 மணி அளவில் ஐஸ்வர்யா ஆஜராகிவிட்டார். ஆனால், தனுஷ் ஆஜராகவில்லை. இதனால், வழக்கு 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு தனுஷும் ஆஜரானார்.

இந்தநிலையில், இருவரிடமும் நீதிமன்ற அறைக்குள் வைத்து விசாரணையை நீதிபதி மேற்கொண்டார். அதற்கு பதிலளித்த இருவரும், பிரிந்து செல்ல உறுதியாக இருப்பதாகவும், அதில் எந்த மாறுபாடும் இல்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், விவாகரத்து வழக்கில் வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.