சினிமா

தெலுங்கு திரையுலகினருக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஜெகன் மோகன் அரசு!

தெலுங்கு திரையுலகினருக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஜெகன் மோகன் அரசு!

நிவேதா ஜெகராஜா

தியேட்டர் டிக்கெட் விலை தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு எடுத்துள்ள முடிவு மீண்டும் தெலுங்கு திரையுலகில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

சில மாதங்கள் முன் ஆந்திர உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின் அம்மாநில முதல்வர் ஜெகன் எடுத்த நடவடிக்கை ஒன்று விமர்சனங்களை ஏற்படுத்தியது. தெலுங்கு சினிமாவின் 'பவர்' ஸ்டார் என அழைக்கப்படுபவரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் நடிப்பில், 'பிங்க்' ரீமேக் படமான 'வக்கீல் சாப்' திரைப்படம் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் வெளியானது. இது பவன் நடிப்பில் நீண்ட மாதங்களுக்கு பிறகு வெளியான படம் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். பட வசூல் வெளியிட்ட சில நாட்களில் பல்வேறு ரெக்கார்டுகளை முறியடிக்க தொடங்கியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்தப் படத்துக்கு யாரும் எதிர்பாராத வகையில் ஜெகன் அரசு குடைச்சல் கொடுத்தது.

'வக்கீல் சாப்' படம் வெளியானபோது, படத்தின் டிக்கெட் விலை தொடர்பாக ஜெகன் அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. வெவ்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள வெவ்வேறு திரையரங்குகளுக்கு வெவ்வேறு நிலையான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது அந்த அரசாணை. கார்ப்பரேஷன்கள், நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திரையரங்குகளுக்கு ஒவ்வொரு விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜெகன் அரசு எடுத்த இந்த நடவடிக்கை, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதோடு, இந்த நடவடிக்கை பவன் மீதான அரசியல் தாக்குதலாக பார்க்கப்பட்டது. ஏனென்றால், பவனின் சமீப கால அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜெகனை எதிர்த்தே இருக்கிறது. திருப்பதி மக்களைவைத் தேர்தலில் ஜெகன் கட்சியை எதிர்த்து பாஜக நேரடியாக களம் கண்டது. பாஜக கூட்டணியில் இருக்கும் பவன், தான் நிற்பது போலவே கருதி தேர்தலில் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்தார். இதனால் அவரை நிதி ரீதியாக முடக்கவே இப்படி ஒரு நடவடிக்கையை ஆளும் அரசு எடுத்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஜெகன் அரசு எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்து வந்தது. எனினும், சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா', ராஜம மவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' போன்ற பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்து வரவிருக்கின்றன. அந்தப் படங்களுக்கும் அரசாங்கம் அதே அரசாணையை பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், தற்போது அதற்கும் விடை கொடுத்திருக்கிறது ஜெகன் அரசு.

சமீபத்தில் வெளியிட அரசாணைப்படி, சினிமா அரங்குகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து, டிக்கெட் விலையை ஆந்திர அரசு அவ்வப்போது தீர்மானிக்கும். இதன் பொருள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு டிக்கெட் விலையை முடிவெடுக்க எந்த உரிமையும் கிடையாது. 1955-இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 1273-இல் திருத்தங்களைச் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பேரிடரால் மக்களை தியேட்டர் பக்கம் கொண்டு வருவதே சிரமமாக இருக்கும் சூழலில், இந்த அறிவிப்பு மக்களை தியேட்டர் பக்கம் திரும்ப விடாமல் செய்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் தெலுங்கு திரையுலகினர்.

இதற்கிடையேதான் இன்று முதல் ஆந்திர மாநில திரையரங்குகள் 50 சதவீத இருக்கை கொண்டு திறக்கப்பட்டுள்ளது. கட்டாயம் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.