சினிமா

‘என் ஃபேஸ்’ தொழில்நுட்பத்தில் தயாராகும் எம்.ஜி.ஆர்

‘என் ஃபேஸ்’ தொழில்நுட்பத்தில் தயாராகும் எம்.ஜி.ஆர்

webteam

வெள்ளித்திரையில் எம். ஜி. ஆர். புதிய பரிணாமான ‘என் ஃபேஸ்’தொழிற்நுட்பத்தின் மூலம் விரைவில் வெளிவர இருக்கிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழிற்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.  

மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவுட் VFX தொழிற்நுட்ப வல்லுனர்களும் இணைந்து,  எம்.ஜி.ஆரை ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இச்சர்வதேச திரைப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நடிக, நடிகைகள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள். ‘என் ஃபேஸ்’ (N-Face) தொழில்நுட்பத்தில் இது தயாராக உள்ளது.   

இந்தத் திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது. இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுவதால், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்படும்.  

இது குறித்து ஆரஞ்ச் கவுண்டி தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி,“இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து,  கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். எங்கள் படத்திற்கு தேவையான பங்களிப்பை அவர் தருவார் என நம்புகிறோம்” என்கிறார்.