'ஜகமே தந்திரம்' படத்தில் சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ரஜினியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் 'ஜகமே தந்திரம்'. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இந்தப் படத்தில் சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் கவனம் ஈர்த்தார். இவரின் `துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற டயலாக் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனது. படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையில் இவரின் நடிப்பு பேசுபொருளாகி இருக்கிறது. இதற்கிடையே, இந்தப் படத்தின் மூலம் தனக்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸ் குறித்து 'ஃபிலிம் கம்பானியன் - சவுத்' யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்துள்ளார் ஜோஜு ஜார்ஜ்.
அதில், ``தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரை போன்ற நகரங்களிலிருந்து என்னை வாழ்த்தி செய்திகள் அனுப்புகின்றனர். எனக்கு கிடைத்த பெரும்பாலான வாழ்த்துக்கள், இலங்கை மற்றும் மலேசியா போன்று இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவை. ரசிகர்களை தாண்டி சினிமாதுறையைச் சேர்ந்த பல கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.
ஒருநாள் கார்த்திக் சுப்புராஜ் உடன் பேசிக்கொண்டிருக்கும்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் படத்தைப் பார்த்ததாகவும், அவர் என்னைப் பற்றி பேசியதாகவும் கூறினார். இது எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், இந்த செய்தி இதுவரை கிடைத்த வாழ்த்தில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தபோது, வாய்ப்பு தேடி அலைந்தபோது நான் மிகப்பெரிய அதிசயமாக பார்த்தது ரஜினி சார், மம்மூட்டி சார் போன்றோர்கள்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை கார்த்திக் சுப்பராஜிடம் சொன்னேன். நான் அவரை இதுவரை சந்தித்ததில்லை. சந்திக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலாக இருக்கிறேன்" என்றவர் மம்மூட்டியின் படத்தில் முதல்முறை வசனம் பேசிய நினைவலைகளை வெளிப்படுத்தினார்.
பிரபு நடித்த கும்பக்கரை தங்கையா படத்தை பார்த்த அனுபவம் பற்றி சிலாகித்து பேசிய அவர், ’கும்பம் கரை வாழும் தங்கையா உனக்கு கோடி வணக்கம் ஐய்யா’ என பாடியும் காட்டினார். சின்னத்தம்பி படம் குறித்தும் பேசினார்.
``மம்மூட்டி சாரின் படத்தின் முதல்முறையாக எனக்கு வசனம் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பெரிய அதிர்ஷ்டம். மம்மூட்டி, தனுஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் நான் பணிபுரியும்போது இணை நடிகராக அல்லாமல், ஒரு ரசிகரை போல இருந்து அவர்களுடன் பணிபுரிந்தேன்" என்று நெகிழ்ந்துள்ளார் ஜோஜு ஜார்ஜ்.
தொடர்புடைய இணைப்பு: ரூ.50 சம்பளம் to தேசிய விருது... வலிமிகு பயணம் - மலையாள 'விஜய் சேதுபதி' ஜோஜு ஜார்ஜ்!