சினிமா

"பைரஸியால் சினிமாவுக்கு வந்தேன்"-இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருக்கு சினிமாவில் வயது 30

"பைரஸியால் சினிமாவுக்கு வந்தேன்"-இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருக்கு சினிமாவில் வயது 30

webteam

தமிழ் சினிமாவில் கே.எஸ்.ரவிக்குமார் கால்பதித்து முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது முதல் படமான புரியாத புதிர் வெளியான தேதி செப்டம்பர் 7,1990. ஆனால் அவர் சினிமாவுக்கு ஒரு விநியோகஸ்தராக வந்து நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "பைரஸியால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் மற்றும் மலையாளப் படங்களின் எப்எம்எஸ் உரிமைகளை வாங்கி சிங்கப்பூரில் இருந்த பிரபாகர் நாயர் என்பவருக்கு அனுப்பிவந்தேன். அந்த தொழில் சிறப்பாகவே போய்க்கொண்டிருந்தது. பைரஸியால்தான் நான் சினிமாவில் நுழைந்தேன். நம்முடைய ஒரிஜினல் பிரிண்ட் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு பைரஸி காப்பியை திரையிட்டுவிடுவார்கள். அப்போது வேறு தொழில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன்" என்று பகிர்ந்துள்ளார்.

பின்னர், தன் திருமணத்தையே தள்ளிவைத்து இயக்குநர் விக்ரமனிடம் 'புதுவசந்தம்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து பிரபல இயக்குநர்களில் ஒருவராக உருவான வெற்றிக்கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆர்.பி. செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் படமான புரியாத புதிரை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற கே.எஸ். ரவிக்குமார், "பராசக்திக்கு முதல் கேடயம் பெற்ற நடிகர் திலகத்துக்கு படையப்பா படத்துக்காக கடைசி கேடயத்தைக் கொடுக்கும் பேறு பெற்றேன் " என்கிறார்.

தன் திரைவாழ்வில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹசன், அஜித்குமார், விஜய், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவங்களை வைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். "தமிழ் சினிமாவில் மிகவும் இனிமையான மனிதர்களில் அஜித்தும் ஒருவர்" என்று பாராட்டுகிறார்.

"புரியாத புதிர் படப்பிடிப்புக்கு முன்பு சரத்குமார் ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். கழுத்தில் பெல்ட்டுடன்தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். விரைவிலேயே அவர், என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறிப்போனார். நாங்கள் இருவரும் சேர்ந்து பத்து படங்கள் செய்திருக்கிறோம்" என்று நினைவுகளில் மூழ்கி எழுந்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.