மதமா ? மனிதமா ? - ஜிப்ஸி திரைப்படம் சொல்வது என்ன ?
குக்கூ, ஜோக்கர் என்ற இரண்டு சிறந்த படைப்புகளை தந்த இயக்குனர் ராஜூமுருகனின் அடுத்த படைப்பாக வெளிவரவிருக்கும் படம் ஜிப்ஸி. ஜீவா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நட்டாஷா சிங் நடித்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களாக லால் ஜோஸ், சன்னி வேய்ன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தின் கதை காஷ்மீரில் நடக்கும் போர்க்களத்தில் தொடங்குகிறது. அங்கு இந்து - முஸ்லீம் என கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு மகனாக இருக்கும் ஜீவா, பெற்றோரின் இறப்புக்கு பின்னர் நாடோடியுடன் சேர்ந்து பயணிக்கிறார். குதிரை, இசை என வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடக்கும் ஜீவாவிற்கு, உடனிருக்கும் நாடோடியின் மறைவு புதிய எண்ணங்களை தோற்றுவிக்கிறது. அவர் கூறிய கடைசி வார்த்தைகளைக் கொண்டு தனது வாழ்வின் தேடலை தொடங்குகிறார்.
இஸ்லாமிய திருவிழா ஒன்றில் பங்கேற்கு ஜீவா, அங்கே கதாநாயகியைக் கண்டு காதலில் விழுகிறார். ஜீவாவின் மீது காதநாயகிக்கும் காதல் ஏற்பட, மதத்தை மனதில் வைத்து மறைக்கிறார் அப்பெண். மகளின் காதலை அறிந்துகொண்ட தந்தை, அவருக்கு மணமுடிக்க முடிவு செய்கிறார். எதிர்பாராத விதமாக ஜீவாவும், கதாநாயகியும் ஊரைவிட்டு சென்றுவிடுகின்றனர். இருவருக்கு திருமணமாகி வாழ்க்கை உருண்டோட, ஒருகட்டத்தில் குழந்தை பிறக்கும் தருணம் வருகிறது. அப்போது மதக்கலவரத்தில் சிக்கிய ஜீவா, தனது மனைவி நடுரோட்டில் விட்டுவிட்டு சிறை செல்கிறார்.
சிறைவாசம் முடிந்து திரும்பும் ஜீவா, மனநலமற்ற நிலையில் இருக்கும் மனைவியை கண்டு மனமுடைகிறார். குழந்தையையும், மனைவியையும் நெருங்கவிடாமல் ஜீவாவின் மாமா தடுக்க, தன் வாழ்க்கையை புறட்டிப்போட்ட மதக்கலவரத்திற்கு பாடம் புகுட்டுகிறாரா, வாழ்க்கை துணையுடன் மீண்டும் சேருகிறாரா ? என்பதே ஜிப்ஸியின் கதை..!
படத்தின் மிகப்பெரிய பலம் கதாபத்திரங்களின் தேர்வு. ஜீவா, கதாநாயகி நட்டாஷா, அவரின் தந்தையாக வரும் லால் ஜோஸ் ஆகியோரின் நடிப்பு
கதைக்கு மிகப் பெரிய பலமாக அமைத்திருக்கிறது. நாடோடியின் வாழ்க்கை எனபதால் ஒளிப்பதிவாளர் செல்வகுமாருக்கு அதிக வேலை. ஆனால் அதனை தனது கேமரா கண்களால் கணக்கச்சிதாக படம் பிடித்திருக்கிறார்.
பொதுவாக ராஜுமுருகனின் எழுத்துக்கள் அடித்தட்டு மக்களின் மறைக்கப்படும் துரயங்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் அது இந்தப்படத்தில் மிஸ்ஸாகி விட்டது. படத்தில் இடம் பெறும் கலவரம், இன்றைய டெல்லி வன்முறையை நமக்கு நியாபகப்படுத்தினாலும், அதை காதலுடன் கோர்த்த விதத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் அரசியல் தலைவராக வரும் சன்னி வேய்னுக்கு இன்னும் முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம். அரசின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக கொதித்தெழும் ஜீவாவுக்கு பின்னணியில் சே.குவேரா, பகத் சிங் ஆகியோர் காண்பிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கன. இறுதியில் ஜாதி மதங்களை கடந்து மனிதமே உயர்ந்தது என்று கருத்து முத்திரை பதித்தற்காக வேண்டுமானால் ராஜீமுருகனை பாராட்டலாம்.