சினிமா

100% புக் ஆன 'மாஸ்டர்' டிக்கெட்டுகள்... குழம்பிய ரசிகர்கள்... தியேட்டர்களின் திட்டம் என்ன?

100% புக் ஆன 'மாஸ்டர்' டிக்கெட்டுகள்... குழம்பிய ரசிகர்கள்... தியேட்டர்களின் திட்டம் என்ன?

webteam

தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதித்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றதால், தாங்கள் புக் செய்த 'மாஸ்டர்' படத்துக்கான டிக்கெட்டின் பணம் என்ன ஆனது என குழம்பிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துடன் இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஈஸ்வரன்' படமும் வெளியாக இருக்கிறது.

முன்னதாக, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முதல்வரிடம் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வரும் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டார்.

இதற்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசும் கூறியது. பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 100 சதவீத அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுடக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, சிறப்புக் காட்சிகளை திரையிடவும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டதில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களும் படத்துக்கான ஆன்லைன் முன்பதிவை ஆரம்பித்தனர். அதன்படி, இரண்டு படங்களுக்கும், குறிப்பாக 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான முன் பதிவும் பெரும்பாலான திரையரங்குகளில் முடிந்துவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு தன்னுடைய உத்தரவை வாபஸ் வாங்கியிருக்கிற நிலையில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ரசிகர்களின் பணம் கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல் ரசிகர்களை எப்படி சமாளிப்பது எப்படி என்றும் தியேட்டர் அதிபர்கள் குழம்பி போய் உள்ளனர். நெட்டிசன்கள் பலரும் தங்கள் புக் செய்த டிக்கெட்டுகளை பதிவிட்டு, இதற்கு என்ன தீர்வு என்று வினவி வருகின்றனர்.

தற்போது தியேட்டர் அதிபர்கள் அனைவரும் அனைத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டு, 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டும் முன்பதிவை முதலில் இருந்து தொடங்கலாம் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதில் நடக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.