திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியத்தின் முடிவில் படத் தயாரிப்பாளர்கள் முரண்படும் பட்சத்தில் அவர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுவது வழக்கம். 1983-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இனி தணிக்கை வாரியத்தின் முடிவுடன் முரண்பட்டால் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பாலிவுட் திரைப்படத்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதுடன் துணிச்சலான கருத்துகளை சொல்வதற்கும் தயக்கம் ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.