சினிமா

400 மில்லியன் டாலர்... பேரிடரிலும் வசூல் சாதனையில் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9'

400 மில்லியன் டாலர்... பேரிடரிலும் வசூல் சாதனையில் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9'

நிவேதா ஜெகராஜா

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9' திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஹாலிவுட் சினிமா உலகினரை வியக்கவைத்திருக்கிறது.

ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டத்துக்கும் அதிரடிக்கும் பெயர் பெற்ற திரைப்படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'. இதுவரை 9 பாகங்களாக வெளிவந்துள்ளது இந்த திரைப்படம். 9-வது பாகம் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் சமீபத்தில்தான் வெளிவந்தது. ஜஸ்டின் லின் இயக்கத்தில், இப்படத்தின் முந்திய பாகங்களில் நாயகனாக நடித்திருந்த வின் டீசல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ரெஸ்ஸிலிங் வீரர் ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான முதல் வார இறுதியில் 70 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது இந்தப் படம். இதன் மூலம் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் 9ம் பாகம் தான் வட அமெரிக்காவில் கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து வெளியிடப்பட்ட மிக வெற்றிகரமான படம் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. வட அமெரிக்காவில் 70 மில்லியன் டாலர் வசூல் என்கிற வேளையில் ஒட்டுமொத்தமாக, உலகளவில் 400 மில்லியன் டாலருக்கு அதிகமாக வசூல் செய்து இந்த கொரோனா சூழலில் அதிக தொகை வசூலித்த படமாக மாறியிருக்கிறது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வியாழக்கிழமைதான் இந்தப் படம் வெளியானது. இந்த நாடுகளில் சினிமா தியேட்டர்கள் பல கட்டுப்பாடுகளை பின்பற்றியே இயக்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், படம் வெளியான முதல் நாளில் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு மே மாதம் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட ஒரு வருடம் கழித்துதான் வெளியானது. இதேபோல், ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைப்படமான 'நோ டைம் டு டை' கொரோனா காரணமாக தாமதமாகி வருகிறது. வருகிற செப்டம்பரில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்படத்தை இன்னும் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக, இயக்குநர் ஜஸ்டின் லின் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.