டான் படத்தில் எல்லோருமே நாயகர்கள்தான் என கதாநாயகன் சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியுள்ளார்.
டான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கதாநாயகன் சிவகார்த்திகேயன், “ஒரு படம் வெற்றியடைந்தால்தான், தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் முதலீடு செய்ய முடியும். டாக்டர் படத்திற்கு வெற்றியை கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் வெற்றியடைந்தால் அறிமுக இயக்குநர்களை கொண்டு படம் எடுக்க நம்பிக்கை கொடுக்கும்” என்றார்.
மேலும் “நான் ரசித்த, எனக்கு பிடித்த அத்தனை பேரையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளனர். சமுத்திரகனி எனர்ஜி கொடுப்பார். எத்தனை பிரச்னையில் இருந்தாலும், தம்பி வாடா பண்ணுவோம்டா, வெல்வோம்டா என்பார். அது போன்று இன்று யாரும் கூறுவதில்லை. எஸ்.ஜே.சூர்யா குரலை பேசியுள்ளேன். அதன் மூலமே கல்லூரிகளில் அடையாளப்பட்டுள்ளேன். இந்தப் படத்தில் அவருடனே நடித்துள்ளேன்
இந்தப் படத்தில் எனக்கு பாடல் இருப்பதால், ஜோடி இருப்பதால் என்னை நாயகன் என பார்க்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவருமே நாயகர்கள்தான். பிரியங்கா மோகனிடம் எந்த சீனையும் கொடுக்கலாம். அவருக்கு தமிழ் நன்கு புரியும் என்பதால் இயக்குநருக்கு பிரச்னை இல்லாமல் இருந்தது. டான் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி” என்று பேசினார்
மேலும் “சிவாங்கி கேமராவுக்கு முன்னாடி ஒரு மாதிரி, பின்னாடி ஒருமாதிரி இல்லை. எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். அவர் படம் முழுவதும் க்யூட்டான நடிப்பை கொடுத்துள்ளார். அனிருத் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. படத்திற்கான final touch up கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே முழு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
சிபி கடுமையாக உழைக்கிறார். நீங்கள் கடுமையாக உழைத்ததால்தான், அந்த நம்பிக்கையில்தான் நான் இங்கு நிற்கிறேன். எனக்கு ஸ்பாட்டில் ஏதாவது பஞ்ச் போட தோன்றும். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த டயலாக்கையும் போட முடியவில்லை. எனக்கு, பாலாவிற்கு எல்லாம் ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. எந்த டயலாக்கையும் போட முடியாது என! ஆனால் முனிஸ்காந்த் மட்டும் இறுதிவரை டயலாக்கை சேர்க்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்” என்று கூறினார்.
இறுதியாக “எமோஷனுக்கு எப்போதும் நமக்கு தொடர்பு இருக்கிறது. சமூக வலைதளத்தில் பேசுவதெல்லாம் விளையாட்டாக போய்விடும். ஆனால் ரியல் லைஃபில் இருக்கும் எமோஷன் விஷயங்களை சொல்ல சிபி ஆசைப்பட்டார். அண்ணாமலை படம் பார்த்துவிட்டு வீட்டில் வந்து பத்து மாடு வாங்க போறேன். படத்தில் வருவதுபோல ஸ்வீட் கடை வைக்க போறேன்னு சொன்னேன். அப்பாவை பார்த்த போது ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என நினைத்தேன். இறுதியில் மிமிக்ரி பண்ணினேன் உங்கள் கைதட்டலை பார்த்து புரிந்துகொண்டேன். இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.” என்று கூறி எமோஷனலாக நிறைவு செய்தார்.